மகாதிர்: சோஸ்மா சட்டத்தின் கீழ் நஜிப் தடுத்து வைக்கப்பட வேண்டும்

 

 ஜனநாயகத்தை கீழறுப்பு செய்ததற்காக பிரதமர் நஜிப் ரசாக் சோஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் இன்று கூறினார்.

1எம்டிபி பற்றி போலீஸ் புகார் செய்ததற்காக சோஸ்மா சட்டத்தின் கீழ் கைருடின் அபு ஹசான் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார் என்று கூறிய மகாதிர், “நஜிப்பும் அச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கைருடினை விட கூடுதல் காலத்திற்கு தடுத்து வைக்கப்பட வேண்டும் என்றார்.

நஜிப்தான் ஜனநாயக நடைமுறையை கீழறுப்பு செய்கிறார், நாங்கள் அல்ல என்று மகாதிர் இன்று கம்போங் பாருவில் கூறினார்.

1எம்டிபி பற்றி எவரையும் பேச விடாமல் தடுப்பதின் மூலம் நஜிப் ஜனநாயகத்தை கீழறுப்பு செய்கிரார். நாளை தொடங்கவிருக்கும் அம்னோ ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் கூட அது குறித்து பேச முடியாது என்றாரவர்.

கட்சியின் கணக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படுவதை கேட்பதற்காக தாம் அம்னோ ஆண்டுப் பொதுக்கூட்டத்திற்கு செல்லப் போவதாக அவர் தெரிவித்தார்.

“(நஜிப் பெற்ற) ரிம2.6 பில்லியன் நன்கொடை கட்சியின் கணக்கில் இருக்கிறதா என்பதை பார்க்க விரும்புகிறேன். அது இல்லை என்றால், அது எங்கே?”, என்று அவர் கூறினார்.

அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசினுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் மகாதிர் பேசினார்.