பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் செல்வாக்கு சரிவுகண்டு வருவதைக் கருத்தில்கொண்டு பார்க்கையில், அவசரம் அவசரமாக தேசிய பாதுகாப்பு மன்ற (என்எஸ்சி) சட்டவரைவை நிறைவேற்றப்பட்டதிம் பின்னணியில் ஏதோ உள்நோக்கம் இருக்கலாம் என்று அமானா தகவல் பிரிவுத் தலைவர் காலிட் சமாட் கூறினார்.
“அச்சமாக இருக்கிறது. ஏனென்றால் அவரது உள்நோக்கம் என்னவென்று எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால், உள்நோக்கம் இருப்பதாகத்தான் தெரிகிறது.
“காற்றின்றி மரம் அசையுமா”, எனச் செய்தியாளர் கூட்டமொன்றில் காலிட் வினவினார்.
என்எஸ்சி சட்டவரைவு ஒரு பெரிய விவகாரம் என்று குறிப்பிட்ட காலிட், அது அரசமைப்புக்கு எதிரானது என்பதுடன் பேரரசரின் அதிகாரங்கள் சிலவற்றையும் அது எடுத்துக் கொள்கிறது என்றார்.
“அச்சட்டம் அரசியல்வாதிக்கு அளவற்ற அதிகாரத்தை அளிக்கிறது. அவர் சுய நலன் காக்க இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தலாம்.
“இப்படிப்பட்ட அதிகாரம் அரசியலுக்கு மேலான ஓரிடத்தில் அதாவது பேரரசரிடம்தான் இருக்க வேண்டும்”, என்றாரவர்.