தாய்மொழிப்பள்ளிகளுக்கு பிஎம் பாடநூல்களின் மின்-நகல்களை தற்போதைக்கு கொடுக்க வேண்டும்

 

 மாற்றம் செய்யப்பட்ட பகசா மலேசியா பாடநூல்கள் மீண்டும் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும் வரையில் சீன மற்றும் தமிழ்மொழிப்பள்ளிகளுக்கு அப்பாடநூல்களின் மின் – நகல்களைக் கொடுக்குமாறு கல்வி அமைச்சு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பாக பாடநூல்கள் தயார் செய்யப்படுவது சாத்தியமில்லை என்பதால், பகசா மலேசியா பாடநூலின் மின் -நகல்களை கல்வி அமைச்சு தேசிய-வகைப்பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இது ஆசிரியர்கள் அதற்கேற்ப தங்களுடையத் திட்டங்களை வரைவதற்கு உதவும் என்று கீழ்க்கண்ட தாய்மொழிப்பள்ளி ஆதரவு அரசுசார்பற்ற அமைப்புகள் நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளனர்:

Engage, LLG Cultural Development Centre (LLG), Merdeka University Berhad, National Indian Rights Action Team (Niat), Negeri Sembilan Chinese Assembly Hallgbm_logo (NSCAH), Persatuan Aliran Kesedaran Negara (Aliran), The Kuala Lumpur and Selangor Chinese Assembly Hall (KLSCAH), Persatuan Bekas Siswazah Universiti dan Kolej di China, Malaysia (LiuHua), Tamil Foundation Malaysia, Tindak Malaysia (TM), and the United Chinese School Alumni Associations of Malaysia (UCSAAM).

தாய்மொழிப்பள்ளிகளுக்கான பகசா மலேசியா பாடநூல்கள் அப்பள்ளிகளுக்கான பாடத்திட்டத்தைப் பின்பற்றி இருக்க வேண்டும்.

ஆனால், சில சீனமொழி தொடக்கப்பள்ளிகள் (SJK(C) தேசியமொழிப்பள்ளிக்கான (SK)பகசா மலேசியா பாடத்திட்டப்படி தயாரிக்கப்பட்ட பாடநூல்களைப் பெற்றுள்ளன.

சம்பந்தப்பட்ட அரசுசார்பற்ற அமைப்புகள் எடுத்துக்கொண்ட நடவடிக்கையின் விளைவாக கல்வி அமைச்சு புதிய பகசா மலேசியா பாடநூல்களை அச்சிட்டு வெளியிட முடிவெடுத்துள்ளது. இம்முடிவை அந்த அமைப்புகள் வரவேற்றுள்ளன.

மேலும், அந்த அரசுசார்பற்ற அமைப்புகள் அனைத்து வகைப்பள்ளிகளிலும் பகசா மலேசியா கல்வியை ஒரே நிலைப்படுத்தும் திட்டத்தை நிராகரித்துள்ளன.

“சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளில் கற்பிக்கப்படும் பகசா மலேசியா இரண்டாம் மொழி கற்பித்தல் போன்று இருக்க வேண்டும். அதனைப் போதிக்கும் முறை தேசியமொழிப்பள்ளியில் பகசா மலேசியா மாணவர்களின் முதலாம் மொழியாகப் போதிக்கப்படும் முறையிலிருந்து வேறுபட்டிருக்க வேண்டும் என்பது எங்களுடைய நிலைப்பாடு.

“இருப்பினும், தேசிய-வகைப்பள்ளிகளில், (SJK), பகசா மலேசியாவின் தரம் உயர்த்தப்பட வேண்டியதற்கான நடவடிக்கைகள் ஒரு விசாலமான திட்டப்படி மேற்கொள்ளப்பட வேண்டியது இன்றியமையாதது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்”, என்று அவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால், தாய்மொழிப்பள்ளிகளில் பகசா மலேசியாவில் பேசும் மற்றும் எழுதும் திறமையை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட வேண்டும், அவசரப்பட்ட முடிவுகள் விபரீதமான விளைவுகளைக் கொணரும் என்று அந்த அமைப்புகள் எச்சரித்துள்ளன.