‘1எம்டிபி: நஜிப்பின் விளக்கம் மேலும் கேள்விகளைத்தான் எழுப்புகிறது’

subபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  ரிம2.6 பில்லியன்  நன்கொடை  பற்றியும்  1எம்டிபியின்  செயல்பாடுகள்  பற்றியும்  அண்மையில்  அளித்த  விளக்கங்கள்  மேலும் பல  கேள்விகளுக்கு இடமளித்துள்ளதாக  டிஏபி  நாடாளுமன்றத்  தலைவர்  லிம்  கிட்  சியாங்  கூறுகிறார்.

கேள்விகளின்  பட்டியலில்  முதல்  கேள்வி  என்று  குறிப்பிட்ட  அவர்,  நேர்காணல்களிலும்   பூட்டப்பட்ட  கதவுகளுக்குப்  பின்னே  நடக்கும்  அம்னோ   கூட்டங்களிலும்  மட்டுமே  விளக்கமளிக்க  முன்வரும்  நஜிப், நாடாளுமன்றத்தில்  எதிரணி  எம்பிகளின்  முன்னிலையிலும்  விமர்சகர்களின்  முன்னிலையிலும்  விளக்கம்  அளிக்க  மறுப்பதேன்  என்று  வினவினார்.

“பட்ஜெட்  கூட்டத்தொடரின்   கடைசி  நாளன்று நஜிப்  நாடாளுமன்றத்திலிருந்து  ஓடிப்  போனது  ஏன்?”, என்று  நேற்று  பினாங்கில்  ஆற்றிய  உரையின்போது  லிம்  வினவினார்.

1எம்டிபி, ரிம2.6 பில்லியன்  விவகாரங்கள்  விசாரணையில்  இருப்பதால்  அவை  பற்றிப்  பேச  வேண்டாம்  என்று  சட்டத்துறை  தலைவர்  அபாண்டி  அலி  நஜிப்புக்கு  ஆலோசனை  கூறியிருப்பதாக  நாடாளுமன்ற  விவகாரங்களுக்குப்  பொறுப்பான  அமைச்சர்  அஸலினா  ஒத்மான்  கூறியிருப்பது  பற்றியும்  அவர்  கருத்துரைத்தார்.

“அப்படியானால்,  சட்டத்துறைத்  தலைவரின்  ஆலோசனையையும்மீறி  நஜிப்  அம்னோ  ஊடகங்களுக்கு  நேர்காணல் வழங்கியதும்   அம்னோ  கூட்டங்களில்  விளக்கமளித்ததும்  ஏன்”, என்று  வினவியவர்   நஜிப்புக்கு  அப்படி  ஆலோசனை  வழங்கியது  உண்டா  இல்லையா  என்பதை  அபாண்டி  இதுவரை  உறுதிப்படுத்தவில்லை என்பதையும்  சுட்டிக்காட்டினார்.

மேலும், நீதிமன்றத்தை  அவமதிக்கும்  விவகாரமும்  இங்கில்லை,  ஏனென்றால்  ரிம2.6 பில்லியன்  விவகாரம்  மீது  நீதிமன்றத்தில்  வழக்கு  எதுவும்  நடக்கவில்லை, விசாரணை  மட்டுமே  நடக்கிறது  என்றும்  லிம்  கூறினார்.