‘இரத்தம் சிந்துதல் ’ பற்றிப் பேசிய ஷரிசாட்டைச் சாடினார் கிட் சியாங்

bloodநாடு  சீனர்களைப்  பெரும்பான்மையாகக்  கொண்ட  டிஏபி-இன்  ஆட்சிக்குச்  செல்வதைக்  காண்பதைவிட  இரத்த ஆறு  பெருக்கெடுத்து  ஓடுவதைக்  காணத்  தயாராக  இருப்பதாய்க்  கூறிய  அம்னோ  மகளிர்  தலைவர்  ஷரிசாட்  அப்துல்  ஜலில்  கடும்  கண்டனத்துக்கு  ஆளானார்.

அவரைக்  கண்டித்த டிஏபி  பெருந்  தலைவர்  லிம்  கிட்  சியாங்   டிஏபி  மலாய்க்காரர்களைக்  கட்டுப்படுத்தும்  என்ற  அச்சத்தில்  அவர்  அப்படிப்  பேசவில்லை  என்றார்.

“அம்னோ  ஏன்  டிஏபி-யைக்  கண்டு  அஞ்சுகிறது? சீனர்கள்  மலாய்க்காரர்களைத்  தங்கள்  கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வார்களே  என்பதற்காக அல்ல. அம்னோபுத்ரர்களால்  மலாய்க்காரர்களைத்  தங்கள்  பிடிக்குள்  வைத்துக்  கொண்டு தன்னலத்துடன் பயன்படுத்திக்  கொள்ள  முடியாமல்  போகுமே  என்றுதான் அஞ்சுகிறது.

“அரசியல்  வாழ்க்கையையும்  கட்சியில்  தங்கள்  நிலையையும்  நிரந்தரமாக்கிக்  கொள்ள  அச்சத்தையும்  வெறுப்பையும்  பொய்களையும்  வைத்து  அரசியல் நடத்தும்  சராசரி  அம்னோ  தலைவர்களில் ஷரிசாட்டும்  ஒருவர்”.

அவரது  பேச்சைப்  பொய்மூட்டை  என்று  வருணித்த  கேளாங்  பாத்தா  எம்பி,    சீனர்கள்  மலாய்க்காரர்களைக் கடுப்படுத்துவதையோ  மலாய்க்காரர்கள்  சீனர்களைக்  கட்டுப்படுத்துவதையோ  எந்தவோர்  இனமும்  இன்னோர்  இனத்தைக்  கட்டுப்படுத்துவதையோ  டிஏபி  விரும்பவில்லை  என்றார்.

மலேசியர்கள்  இனவேறுபாடுகளைத்  தாண்டி  மலேசியர்  என்ற உணர்வுடன்  தேசிய  நலனுக்காக  பாடுபடுவதையே  டிஏபி  விரும்புகிறது  என்றாரவர்.