ஜேஏசி-இன் பரிந்துரைகள் நேரடியாக பேரரசரிடம் வழங்கப்பட வேண்டும்

paramநீதிபதிகள்  நியமன  ஆணையம்(ஜேஏசி)  அதன்  பரிந்துரைகளை   நேரடியாக  மாட்சிமை  தங்கிய  மாமன்னரிடம்தான்  வழங்க வேண்டும்  என்று  வழக்குரைஞர்  மன்ற  முன்னாள்  தலைவர்  பரம்  குமரசுவாமி  கூறினார்.

இது, பரிந்துரைகள்  பிரதமர்   மூலமாக  செல்வதைத்  தவிர்த்து  வெளிப்படைத்தன்மையையும்  நீதித்துறை  சுதந்திரமாக  செயல்படுவதையும்  உறுதிப்படுத்தும். முன்னாள்  நீதிபதி  முகம்மட்  ஹிஷாமுடின்  முகம்மட்  யூனுசின்   பணியுயர்வின்போது  ஏற்பட்டதைப்  போன்ற  சர்ச்சைகள் உருவாவதற்கும் இடமளிக்காது.

“ஜேஏசி 2009-இல்  சட்டப்படி  அமைக்கப்பட்ட  அமைப்புத்தான். ஆனால், அதை  உருவாக்கிய  சட்டம்  ஆணையம்  பணியுயர்வுக்காக  ஆணையம்  பேரரசரிடம்  பரிந்துரைக்கும்  பெயர்களைப்  பிரதமர்  அப்படியே  ஏற்க  வேண்டும்  என்பதைத்    தெளிவாக  தெரிவிக்கவில்லை.

“அண்மையில்  நீதிபதி  ஹிஷாமுடின்  பணியுயர்வு  தொடர்பில்  எழுந்த சர்ச்சையைக்  கருத்தில்  கொண்டால்  ஆணையம்  அதன்  பரிந்துரையைப்  பிரதமரிடம்  அல்லாமல்  பேரரசரிடம்  நேரடியாக  வழங்குவதே  நல்லது”.

பரம்  குமரசுவாமி  மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணையம்  ஏற்பாடு  செய்திருந்த  ஒரு  கருத்தரங்கில்  பேசியபோது  இவ்வாறு  குறிப்பிட்டார்.