மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) பிரதமர் நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் வைக்கப்பட்ட ரிம2.6 பில்லியன் “அரசியல் நன்கொடை” சம்பந்தமாக மத்தியக் கிழக்கில் சந்தித்தது ஒரே ஒருவரைத்தான் என்று ஒரு வட்டாரம் கூறிற்று.
கிடைக்கப்பட்ட தகவலின்படி, ஒரே ஒரு நன்கொடையாளர்தான் என்று இந்த விசாரணையை நன்கு அறிந்துள்ள அந்த வட்டாரம் கூறியது.
“நாங்கள் ஒருவரை மட்டுமே சந்தித்தோம். எங்கே, எப்போது மற்றும் யார் என்பதை வெளியிட முடியாது”, என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.
இத்தகவல் துணைப் பிரதமர் அஹ்மட் ஸாகிட் ஹமிடி இன்று வெளியிட்ட அறிக்கைக்கு முரணாக இருக்கிறது. இப்பெரும் தொகையை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் அளித்தனர் என்று அவர் கூறியிருந்தார்.
கடந்த ஆகஸ்ட் 3 மற்றும் 5 ஆம் தேதிகளில் எம்எசிசி வெளியிட்ட அறிக்கைகளில் அந்த “நன்கொடையாளர்” பற்றிய விபரங்களை அது பெற்றுள்ளது என்று கூறியதோடு கிடைக்கப்பெற்ற ஆவணங்கள் அடிப்படையில் அந்த ரிம2.6 பில்லியன் ஒரு நன்கொடைதான். அது 1எம்டிபியிடமிருந்து வரவில்லை என்பதை உறுதிப்படுத்தியது.
கடந்த வாரம், எம்எசிசியின் விசாரணை அதிகாரி முகமட் அஸாம் பாக்கி விசாரணையாளர்கள் “நன்கொடையாளர்”ஐச் சந்தித்தனர் என்று ஊடகங்களிடம் கூறினார்.
ஆனால், இவ்வாரத் தொடக்கத்தில் டிவி3, நியு ஸ்ரேட்ஸ் டைம்ஸ், உத்துசான் மலேசியா ஆகியவற்றுடனான ஒரு தனிப்பட்ட நேர்காணலில் தாம் அந்த பணத்தை “penderma-penderma”க்களிடமிருந்து (நன்கொடையாளர்கள்) பெற்றுக்கொண்டதாக நஜிப் கூறினார்.
“நான் எந்த குற்றமோ தவறோ புரியவில்லை. இதை நாடாளுமன்றத்தில் துணைப் பிரதமர் விளக்கியுள்ளார்.
“நன்கொடையாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு எம்எசிசியால் அறியப்பட்டுள்ளனர், மற்றும் ஆணையம் அவர்களின் வாக்குமூலங்களையும் பெற்றுள்ளது”, என்று நஜிப் கூறினார்.
இன்று வெளியிடப்பட்ட த ஸ்டார் நாளிதழுடனான இன்னொரு தனிப்பட்ட நேர்காணலிலும் பிரதமர் மீண்டும் ஒன்றுக்கு மேற்பட்ட நன்கொடையாளர் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
ரிம42 மில்லியன் நிதி அமைச்சுக்கு சொந்தமான எஸ்ஆர்சி இண்டர்நேசனல் செண்டிரியான் பெர்ஹாட்டின் துணை நிறுவனங்கள் வழியாக நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது குறித்தும் ஆணையம் விசாரணை செய்து வருகிறது.
இது குறித்து புத்ரா ஜெயா இதுவரையில் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. நஜிப் தாம் எவ்விதக் குற்றமும் புரியவில்லை என்று மீண்டும் மீண்டும் கூறிவருகிறார். இக்குற்றச்சாட்டுகள் எல்லாம் தம்மை வீழ்த்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள சதி என்று அவர் கூறுகிறார்.
கடந்த சனிக்கிழமை, எம்எசிசி அதிகாரிகள் அடங்கிய குழு நஜிப்பை இந்த இரு விவகாரங்கள் குறித்து அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
“நன்கொடையாளர்” மற்றும் “நன்கொடையாளர்கள்” என்பவற்றுக்கிடையிலான முரண்பாடுகள் குறித்து விளக்கம் பெறுவதற்காக எம்எசிசியின் முகமட் அஸாமுக்கு தொலைபேசி அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல் செய்திகள் விடுத்தும் அவருடன் தொடர்பு கொள்ள இயலவில்லை.
இலஞ்சம் > நன்கொடை > பிச்சை > ?
இல்லை! அவர் தவறு செய்யவில்லை! மீண்டும் மீண்டும் சொல்லுகிறேன்! அவர் தவறு செய்யவில்லை! இல்லை! அவர் தவறு செய்யவில்லை!
இன்னும் நன்கொடை? பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் உண்மையாகி விடும்போல்
நஜிப்பின் அகராதியில் “லஞ்சம் என்றால் நன்கொடை” – “லஞ்சம் கொடுப்பவர் நன்கொடையாளர்” அடாடா அடிச்சதுடா யோகம் அரசாங்க துறையில் உள்ளவர்களுக்கு. அப்புறம் என்ன லஞ்சத்தை தள்ளு தள்ளு நன்கொடையா அள்ளு அள்ளு !!!
ஒரு பொய்யை மறைக்க ஆயிரம் பொய்கள் என்பது இவர்களின் மாற்று கருத்து தெளிவு படுத்துகிறது அல்லவா??? இன்னும் எத்தனை பொய்களோ!!!
துணைப் பிரதமர் மறுபடியும் பல்டி. ஒரு பொய்யை மறைக்க பொய்மேல் பொய் சொன்னால் இதுதான் கதி!!!!