நஜிப் உரையில் இனவாதம் தெரிவதாக ஹராபான் சாடல்

harapanபக்கத்தான்  ஹராபான்  உயர்  தலைவர்கள், நேற்று  அம்னோ  ஏஜிஎம்-மில் அம்னோ தலைவர்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக் ஆற்றிய  தொடக்க உரை இனவாத  அடிப்படையில்  அமைந்திருந்ததாக  சாடியுள்ளனர்.

நஜிப், 14வது பொதுத்  தேர்தலில்  அம்னோ  தோற்றால் ஹராபான்  இஸ்லாத்துக்காகவோ  மலாய்க்காரர்களுக்காகவோ  பூமிபுத்ராக்களுக்காகவோ  பாடுபடாது  என்ற  எண்ணத்தைத்  தோற்றுவிக்க  முனைந்தார்  என்றவர்கள்  கூறினர்.

நஜிப்  இன விவகாரங்கள்வழி  அச்சத்தை  உண்டாக்குவதன்  மூலமாக  தாம்  எதிர்நோக்கும்  நெருக்கடியிலிருந்து  கவனத்தைத்  திசை  திருப்பப்  பார்க்கிறார்  என  பிகேஆர்,  டிஏபி,  அண்மையில்  அமைந்த  பார்டி  அமானா  நெகாரா  ஆகியவற்றின்  கூட்டணியான  பக்கத்தான்  ஹராபான்  கூறிற்று.

“நஜிப்பின்  அரசியல்  ஊழலுக்கும்  இஸ்லாமிய,  மலாய்,  பூமிபுத்ரா  போராட்டத்துக்கும்  தொடர்பில்லை. அம்னோ  எதிர்நோக்கும்  நெருக்கடிக்கு   1எம்டிபி  நிதி  முறைகேடும்  ரிம2.6 பில்லியன்  நஜிப்பின்  வங்கிக்  கணக்குக்கு  மாற்றி  விடப்பட்டதும்தான்  காரணமாகும்”, என்று  அது  கூறியது.