முகைதின் யாசின்: கறைபடியாத தலைவர்கள் மட்டுமே விசுவாசத்திற்கு உரியவர்கள்

 

 கறைபடியாத மற்றும் எந்தத் தவறும் புரியாத தலைவர்கள் மட்டுமே மக்களின் விசுவாத்தைப் பெறுவதற்கு தகுதியானவர்கள் என்று அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசின் இன்று கூறினார்.

தலைவரைப் பின்பற்றுகிறவர்கள் தலைவருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுவதாக பிரதமர் நஜிப் நேற்று அம்னோ ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய அவரது கொள்கை உரையில் கூறினார். அதைக் குறிப்பிட்டு முகைதின் இவ்வாறு கூறினார்.

“இஸ்லாத்தில், நாம் நமது தலைவருக்கு கீழ்ப்படிந்து விசுவாசமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறோம். நேற்று காலையில் தலைவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

“நாம் விசுவாசம் காட்ட வேண்டிய தலைவர்கள் அல்லாவின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிபவர்களாக இருக்க வேண்டும், நம்பக்கூடியவர்களாக, கண்ணியமானவர்களாக, நேர்மையானவர்களாக, களங்கமற்றவர்களாக மற்றும் தவறான செயல்களிலிருந்து ஒதுங்கியிருப்பவர்களாக இருக்க வேண்டும்”, என்று முகைதின் அவரது முகநூலில் பதிவு செய்துள்ளார்.

அம்னோ துணைத் தலைவரின் கடமை தலைவருக்கு உதவி செய்வதாகும் என்று நஜிப் கூறியிருந்ததைக் குறிப்பிட்ட முகைதின், “நான் அதைத்தான் இவ்வளவு காலமாகச் செய்து வருகிறேன் … தலைவருக்கு உதவி செய்ய வேண்டிய எனது கடமையை புறக்கணித்ததே இல்லை”, என்றாரவர்.

அவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட துணைத் தலைவர், கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களுக்கு பொறுப்புடையவர் என்று கூறிய முகைதின், “அடிமட்ட உறுப்பினர்களின் குரல்களுக்கு செவிசாய்த்து சூழ்நிலையை திருத்திக்கொள்ள தலைவருக்கு ஆலோசனை கூறுவது எனது பொறுப்பாகும்”, என்றார்.

அதற்காக, “நான் (துணைப் பிரதமர் பதவியிலிருந்து) அகற்றப்பட்டேன், ஒதுக்கப்பட்டேன், அம்னோ துணைத் தலைவர் என்று முறையில் எனது கடமைகளை நிறைவேற்றுவதிலிருந்து கூட தடுக்கப்பட்டேன்”, முகைதின் முறையிட்டார்.