உலகின் முதல் தமிழ்ப் பிரதமர் வீராசாமி கயானாவில் முதலீடு செய்ய மலேசியர்களை அழைக்கிறார்

KulawithGuianapm-மு. குலசேகரன், டிசம்பர் 12, 2015.

கடந்த நவம்பர் மாதம் 30 ஆம் தேதியிலிருந்து  டிசம்பர் 1 ஆம் தேதி வரையில் இரண்டு நாள்களுக்கு , தென் அமெரிக்காவிலுள்ள  எல்சல்வடோரில் பாராளுமன்ற மன்ற உறுப்பினர்களின் உலக அமைதிக்கான மாநாடு நடைபெற்றது. மலேசியாவை பிரதிநிதித்து  கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதன் பிறகு தென் அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் அதிகமானோர் வாழும் நாடானா கயானாவை காணவேண்டும் என்ற ஆவலில் அதன் தலை நகரான ஜியோர்ஜ் டவுன் சென்றேன்

 

மலேசியாவை விட்டு கிளம்பு முன் நான் அந்நாட்டு பிரதமர் மாண்பு மிகு மோசஸ் வீராசாமி நாகமுத்துவை சந்திக்க எண்ணம் கொண்டு அவரிடம்  முன்அனுமதி  வேண்டி கடிதம் ஒன்று எழுதியிருந்தேன். முன்னாள் பத்திரிகையாளரும், விடுதலை போராட்ட வீரருமான மாண்புமிகு  வீராசாமி அவர்கள் , எதிர்கட்சித் தலைவராக இருந்து மே 2015 லிருந்து அந்நாட்டின் பிரதமராக பதவி ஏற்றுள்ளார். இவர் தனது நாட்டின் விடுதலைக்காக 1964 லிருந்து  தனது 14 வயதிலிருந்தே போராடத்தில் இறங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 இயற்கை எழில் மிகுந்த , பார்க்க வேண்டிய பல சுற்றுலா இடங்களையும் நிறையவே கொண்டுள்ள நாடு கயானா. தென் அமெரிக்காவின் 3 South Americawith Guyanaஆவது சிறிய நாடான கயானாவின் தலைநகர் ஜியோர்ஜ் டவுன். பிரிட்டிஷ்  காலனித்துவ நாடாக இருந்த இதில் பல வம்சாவளியைச் சார்ந்தவர்கள் வாழ்கிறார்கள். இந்தியர்கள், ஆப்ரிக்கர்கள் இந்தோ-அமெரிக்க பிரிவினர் என மூன்று பெரிய பிரிவினர் இருக்கிறார்கள் .தென் அமெரிக்காவிலேயே ஆங்கில மொழியை அதிகாரப்பூர்வ மொழியாக கொண்ட ஒரே நாடு என்ற பெயருடன் குயானா விளங்குகிறது.

 

ஏறக்குறைய 45 விழுக்காட்டு மக்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். தமிழ் நாட்டில் இருந்து தமிழர்கள் 1833 முதலே இங்கு குடியேறத் தொடங்கினர் என்ற வராலாற்று உண்மையையும் எனக்கு தெரிய வந்தது.

 

அந்நாட்டின் வானொலியில் என்னுடைய நேர்க்காணலின் போது மலேசியாவை போலவே இங்கும் பல்வேறு இனங்கள் ஒற்றுமையுடனும் புரிந்துணர்வுடனும்  வாழ்வது கண்டு  பெருமகிழ்ச்சி கொள்வதாகக் கூறினேன்.

 

பின்னர், பிரதமர் வீராசாமி நாகமுத்துவை சந்தித்த போது நான் உலக அமைதிக்கான மாநாட்டிற்கு  வந்திருந்த நோக்கத்தைக் கண்டு மகிழ்ச்சி தெரிவித்த அவர், மலேசியாவுடனான தமது நாட்டின் உறவு வலுப்பெற வேண்டும் என்று  கேட்டுக் கொண்டார்.  நான் பிரதமர்  வீராசாமி அவர்களை  மலேயாவிற்கு அதிகாரப்பூர்வ  விருந்தினராக வரும்படி அழைப்பு விடுத்தேன். இதனையே நமது பிரதமர்  நஜிப் அவர்களிடமும் சொல்லி அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆவண செய்யவிருக்கிறேன்.

 

South Americawith Guyana2தன்னுடைய பாரம்பரிய உறவுகள் தமிழ் நாட்டைச் சார்ந்தவை  என்று கூறிய பிரதமர் வீராசாமி , எப்படி தமிழ் நாட்டிலிருந்து வந்த தமிழர்கள் ஆரம்பத்தில்  மீனவர்களாக அந்த நாட்டில் குடியேறினார்கள் என்பது குறித்து  புத்தகம் ஒன்றையும் எழுதியிருப்பதாக கூறினார். ஆனால் ஒரு வருத்தம் அளிக்கக் கூடிய செய்தி என்னவென்றால் இங்கு  வாழும் தமிழர்களில் யாருக்குமே தமிழ் அறவே தெரியாது என்பதாகும்.

 

குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புலம் பெயர்ந்த தமிழர்கள் அங்கு வாழ்வதாலும் , வெஸ்ட் இண்டிஸ், டிரிண்டாட், தோபாகொ போன்ற நாடுகளில்  தமிழர்கள் அதிகம் இருப்பதாலும் அவர்கள் அனைவருக்குமான  சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யுமாறு நான் விடுத்த வேண்டுகோளை பரசீலிக்க விருப்பதாக வீராசாமி உறுதியளித்தார்.

 

கயானா நாட்டு  இந்திய வம்சாவளியினர்  வியாபரத் துறையையே அதிகம் தேர்ந்தெடுத்து அதில் மிகச்சிறப்பாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறனர். நம் நாட்டு சீனர்களைப் போல வியாபாரத் துறையில் ஆதிக்கம் செலுத்தி நாட்டின் பொருளாதாரத்தையே அவர்கள் கையில் வைத்துக்கொண்டு செல்வாக்குடன் வாழ்கிறார்கள். ஆனால் அரசாங்கச் சேவைகளிலும் ,தற்காப்பு துறையிலும் அதிகமான இந்தியர்களைக் காண முடிவதில்லை என்று கூறிய வீராசாமி இது குறித்து கவலை தெரிவித்தார்.

 

இந்தியாவிற்கு வந்து தன் பூர்வீக இடமான தமிழகத்திற்கு சென்று வர ஆசை கொண்டுள்ள அவர், சிறிலங்கா அரசாங்கமும் தன்னை அங்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளாதாகவும்,  தற்பொழுது யாழ்பாணத்தில் அது மேற்கொண்டிருக்கும் வளர்ச்சிப் பணிகளை காண வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 

தமிழர்கள் அங்கு படுகொலை செய்யப்பட்டது குறித்து  வருத்தம் தெரிவித்த வீராசாமி, கூடிய விரைவில் நியாயமும் தருமமும் அங்கு நிலை நாட்டப்பட வேண்டுமென்ற தமது விருப்பத்தையும் தெரிவித்தார்.

 

விடைபெறுமுன், மலேசியர்கள் கயானாவில் முதலீடு செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்த பொழுது அம்மனிதருடன் 75 மணிதுளிகளைச் செலவிட்டிருந்தேன் என்று எண்ணிப்பார்த்தபொழுது  எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

 

மலேசியாவும் கயானாவும் பல்வெறு துறைகளில் இணைந்து செயல்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் அவரிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டேன்.