டிஏபி: பக்கத்தான் ரக்யாட் 13வது பொதுத் தேர்தலில் தோற்றதிலும் ஒரு நன்மை உண்டு

ge13இப்போது  நினைத்துப்  பார்க்கையில்  13வது பொதுத்  தேர்தலில்  பக்கத்தான்  ரக்யாட்  தோற்றதுகூட  ஒரு “மறைமுகமான  வரப்பிரசாதம்”தான்  என்கிறார்  டிஏபி   மூத்த  தலைவர்  லிம்  கிட்  சியாங்.

பக்கத்தான்  ரக்யாட் வெற்றி  பெற்றிருந்தால்  அன்வார்  இப்ராகிம்  பிரதமராவதற்கு  பாஸ்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்  இணங்கி  இருக்க  மாட்டார்.

“பிரதமராக  அன்வாரைத்  தேர்வு  செய்திருந்ததை (ஹாடி)  ஒருபோதும்  ஒத்துக்கொண்டதில்லை  என்பதால்  கூட்டரசு  அரசாங்கத்தையும்  அமைச்சரவையும்  அமைப்பதற்கு  முன்பே   பக்கத்தான்  ரக்யாட்  முதலாவது  நெருக்கடியை  எதிர்நோக்கியிருக்கும்”, என  சனிக்கிழமை  ஜோகூரில்  உரையாற்றியபோது  லிம்  கூறினார்.

பக்கத்தான்   ரக்யாட்  உடைந்து  போனது  மக்களுக்கு  மிகுந்த  ஏமாற்றத்தைக்  கொடுத்திருக்கலாம். ஆனால், அந்த  இடத்தை  நிரப்ப  இப்போது  பக்கத்தான்  ஹராபான்  வந்துள்ளது  என்றாரவர்.

ஜோகூரின்  முக்கியத்துவத்தையும்  வலியுறுத்திய  அவர்,  வரும்  பொதுத்  தேர்தலில்  பக்கத்தான்  ஹராபான்  ஜோகூர்  மாநிலத்தைக்  கைப்பற்ற  முடியுமானால்  அது  புத்ரா  ஜெயாவைக்  கைப்பற்றுவதை  அம்னோ- பிஎன்னால்  தடுக்க  முடியாது.

2008-க்குமுன்  அம்மாநிலத்தைக்  கைப்பற்றுவது என்பது  நடக்க  முடியாத  ஒன்றாக  இருந்தது. இன்று  அரசியல்  களம்  பெருமளவு  மாறி  விட்டிருக்கிறது  என  லிம்  கூறினார்.