கிருஸ்த்துவ மதத்திற்கு மாற்றும் நடவடிக்கைக்கு எதிரான கருத்தரங்கில் போலீஸ் பங்கேற்பு

 

 கடந்த சனிக்கிழமை, மலாக்கா லெண்டு மாரா தொழிற்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் (யுஐடிஎம்) கிருஸ்த்துவ மதத்திற்கு மாற்றம் செய்யப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட கருத்தரங்கில் தங்களுடைய கருத்துகளை முன்வைத்தவர்களில் ஒருவர் அரச மலேசிய போலீஸ் படையைச் சேர்ந்தவர்.

அந்த கருத்தரங்கின் படம் ஒன்று ஓன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் “Ancaman Gerakan Pemurtadan Kritianisasai” (கிருஸ்த்துவ மதமாற்ற இயக்கத்தின் அச்சுறுத்தல்) என்ற தலைப்பு காணப்படுகிறது.

அந்தப் படைப்பில் போலீஸ் படையின் சின்னமும் காணப்பட்டது.

அந்தக் கருத்தரங்கில் புக்கிட் அமானிலிருந்து சிறப்புப் பிரிவு அதிகாரி ஒருவர் பங்கேற்றதை மலாக்கா போலீஸ் தலைமை அதிகாரி சுவா கீ லை உறுத்திப்படுத்தினார்.

இந்நாட்டிலும் இதர வெளிநாடுகளிலும் இஸ்லாமியர்களை மற்ற மதங்களுக்கு மாற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பற்றி பேசப்பட்டது என்று கூறிய சுவா, இஸ்லாமியர்களின், குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்களின், சமய ஈடுபாட்டை வலுப்படுத்துவது அதன் நோக்கம் என்று அவர் வாட்ஸ்அப் செய்தி மூலம் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

இதற்கு எதிர்வினையாற்றுமாறு யுஐடிஎம்மை மலேசியாகினி கேட்டுக்கொண்டுள்ளது.