தேசிய பாதுகாப்பு மன்ற (என்எஸ்சி) சட்டவரைவு பாதுகாப்புப் பகுதிக்கு இயக்குனராக நியமிக்கப்படுபவருக்கு விரிவான அதிகாரங்களை வழங்குவதைப் பார்க்கையில் அது அரசமைப்புக்கு விரோதமானதாகவும் மற்ற சட்டங்களுக்கு முரணாக இருக்கலாம்.
இவ்வாறு தெரிவித்த மலேசிய செனட்டர் மன்ற(எம்எஸ்எம்)த் தலைவர் அப்துல் ரஹிம் அப்துல் ரஹ்மான், செனட் ஒரு ரப்பர் முத்திரை என்று சொல்லப்படாதிருக்க நிலை ஆணைகளின்கீழ் ஒரு குழுவை அமைத்து அச்சட்டவரைவை விவாதிப்பது நல்லது என்று ஆலோசனை கூறினார்.
அதே வேளை நாட்டின் பாதுகாப்புக்கு அச்சட்டம் அவசியம் என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
என்எஸ்சி இரண்டாம் வாசிப்பின்போது அதன்மீது விவாதமிட்ட அப்துல் ரஹிம், அச்சட்டவரைவு நடவடிக்கை இயக்குனருக்கு அளவற்ற அதிகாரம் வழங்குவதும் அவர்மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாதபடிக்குப் பாதுகாப்பு வழங்குவதும் ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
“அரசமைப்புடன் முரண்படுவதைத் தவிர்க்க என்எஸ்சி ச்ட்டவரைவின் பிரிவு 21(2) திருத்தப்பட வேண்டும் என்று முன்மொழிகிறேன்”, என்றார்.
அது மக்களை அப்புறப்படுத்தவும் நிலங்களையும் சொத்துகளையும் கையகப்படுத்திக் கொள்ளவும் பாதுகாப்புப் படைகளுக்கு அதிகாரம் அளிப்பது குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். இது அரசியலமைப்பின் 9ஆம் 13ஆம் பகுதிகளுடன் முரண்படலாம் என்றும் அவர் சொன்னார்.
ஒரு நடவடிக்கையின்போது குண்டுபோட்டு அழிக்கப்படும் அல்லது தேவையை முன்னிட்டு கையகப்படுத்தப்படும் சொத்துகளுக்கு இழப்பீடுகளை முடிவு செய்யும் அதிகாரம் இயக்குனருக்கு வழங்கப்பட்டிருப்பது பற்றியும் அவர் கேள்வி எழுப்பினார்.
இது, முறையான இழப்பீடு கொடுக்கப்படுவதை வலியுறுத்தும் கூட்டரசு அரசமைப்பின் நிலக் கையகச் சட்டத்தை மீறுகிறது என்றாரவர்.
கொஞ்சம் புத்தி வந்திருக்கு.