குடிநுழைவுத்துறை அதிகாரிகள் கருப்புப் பணத்தை வெள்ளையாக்க முயன்றார்களா என்று விசாரணை

மனிதக் கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட குடிநுழைவுத்துறை அதிகாரிகள் எண்மர்மீது இப்போது 2001ஆம் ஆண்டு பணத்தை வெள்ளையாக்குதல் மற்றும் பயங்கவாதத்துக்கு நிதியளித்தல் சட்டத்தின்கீழ் விசாரணை நடத்தப்படுகிறது.

இதனைத் தெரிவித்த உள்துறை அமைச்சு, ஓராண்டுக்காலம் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட அந்த அதிகாரிகள்மீது ஏற்கனவே அவர்கள்மீது சுமத்தப்பட்டிருந்த 2007 மனிதக்கடத்தல்-எதிர்ப்புச் சட்டத்தின்கீழ் ஏன் விசாரணை நடத்தப்படவில்லை என்பதை விளக்கவில்லை.

அவர்கள் விடுவிக்கப்பட்டதற்கான காரணத்தையும் மனிதக் கடத்தல்-எதிர்ப்புச் சட்டத்தின்கீழ் அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையையும் விளக்குமாறு கேட்டிருந்த லிம் லிப் எங்(டிஏபி-செகாம்புட்)குக்கு வழங்கப்பட்ட எழுத்துவடிவிலான பதிலில் அவர்கள் பயங்கரவாத நிதியளிப்புச் சட்டத்தின்கீழ் விசாரிக்கப்பட்டு வருவதற்கான காரணமும் விளக்கப்படவில்லை.

“குடிநுழைவு அதிகாரிகள் எண்மரும், அவர்கள் நாட்டின் பாதுகாப்புக்கு இனியும் மருட்டலாக இருக்க மாட்டார்கள் எனப் போலீசும் சிறை அதிகாரிகளும் கொடுத்த அறிக்கைகளின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்”, என்று உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் தம் பதிலில் தெரிவித்திருந்தார்.

“இப்போது அவர்கள்மீது  2001ஆம் ஆண்டு பணத்தை வெள்ளையாக்குதல் மற்றும் பயங்கவாதத்துக்கு நிதியளித்தல் சட்டத்தின்கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசாரணை முடிந்ததும் விசாரணை ஆவணங்கள் மேல்நடவடிக்கைக்காக சட்டத்துறை தலைவர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்”, என்றாரவர்.

அந்த அதிகாரிகள் ஆகஸ்ட் மாதம் விடுவிக்கப்பட்டனர். அதற்குக் காரணம் ஹிஷாமுடின் கூறியிருப்பதுபோல், “அவர்கள் தவற்றை உணர்ந்து விட்டார்கள், இனி அத்தவற்றைச் செய்வதில்லை என்று வாக்குக் கொடுத்திருக்கிறார்கள்”.