அபு காசிம்: பிரதமர் “நன்கொடை” விவகாரத்தை உண்மை தெரியும் வரையில் விடப்போவதில்லை

 பிரதமர் நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் வைக்கப்பட்ட பில்லியன் கணக்கான பணம் குறித்த விசாரணையை உண்மை தெரியும் வரையில் விடப்போவதில்லை என்று மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் தலைவர் அபு காசிம் சூளுரைத்தார். முதல் தடவையாக, பதவியிலிருக்கும் ஒரு பிரதமர் சம்பந்தப்பட்ட வழக்கை விசாரிப்பது சவால் மிக்க ஒன்றாக இருந்து வருகிறது என்று அபு காசிம் ஓரியண்டல் டெய்லிக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் கூறினார். இந்த விசாரணையில் எவரும் அவரது செல்வாக்கை பயன்படுத்த அனுமதிக்கப்படாது என்று தாம் ஆணையத்தின் விசாரணை அதிகாரிகளுக்கு வாக்குறுத்தி அளித்துள்ளதாகவும் அவர் கூறினார். நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் வைக்கப்பட்டுள்ள ரிம2.6 பில்லியன் “அரசியல் நன்கொடை” பற்றிய உண்மையை மக்கள் இறுதியில் தெரிந்து கொள்வார்கள் என்றாரவர். இது நீண்ட மற்றும் சவால் மிக்க ஒன்றாகும். இதில் பல தரப்பினர் சம்பந்தப்பட்டுள்ளனர். இதுவரையில் 90 சாட்சிகளுக்கு அழைப்பாணை விடுத்துள்ளோம். பலர் வெளிநாட்டினர் என்றும் அவர் தெரிவித்தார். இவ்விவகாரம் குறித்து ஊகங்களில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட அபு காசிம், ஆணையம் இவ்விசாரனையை சுயேட்சையாகவும், வெளிப்படையாகவும், தொழிலியப்படியும் நடத்தும் என்று கூறினார். மேலும் ஒன்றை கூறினார்: “நாங்கள் விசாரணை முடிந்தவுடன் அறிக்கையை சட்டத்துறை தலைவரின் அலுவலகத்திடம் அளிப்போம். வழக்குத் தொடர்தல் அவர்களின் முடிவைப் பொறுத்ததாகும்.”