வருமானத்தைப் பெருக்க இன்னொரு வேலையும் செய்யலாம் என்ற அமைச்சரின் கருத்துக்குக் கண்டனம்

hitஅனைத்துலக  வாணிக,  தொழில்  துணை  அமைச்சர்  அஹ்மட்  மஸ்லான்,  குறைந்த  வருமானம்  ஈட்டுவோர்  வரவு-செலவைச்  சரிக்கட்ட  இன்னொரு  வேலையும்  செய்யலாம்  என்று சொல்லி  நன்றாக  வாங்கிக்  கட்டிக்  கொண்டிருக்கிறார்.

அது  ஒரு  ஆக்கப்பூர்வமான  கருத்தல்ல  என்று மலேசிய  தொழிற்சங்கக் காங்கிரஸ்(எம்டியூசி)  நினைப்பதாக  அதன்  தலைமைச்  செயலாளர்  என். கோபாலகிருஷ்ணன்  கூறினார்.

“மாறாக,   அரசாங்கம்  அணுகுமுறைகளை  மாற்றி  அமைத்து  பயனான  வியூகங்களை  உருவாக்கி   ஒவ்வொரு  ஊழியரும்,  அவர்  அரசாங்கத்தில்  பணி புரிந்தாலும்  சரி தனியார்  துறையில்  பணி  புரிந்தாலும் சரி,  போதுமான  வருமானத்தை  ஈட்டுவதை  உறுதிப்படுத்த  வேண்டும்  என  எம்டியூசி விரும்புகிறது”, எனக்  கோபாலகிருஷ்ணன்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

வருமானச்  சிக்கலை  எதிர்நோக்கும்  மலேசியர்கள்  இரண்டாவது வேலை  ஒன்றைத்  தேடிக்  கொள்வது  நல்லது  என  அஹ்மட்  மஸ்லான்  தெரிவித்ததாக  எஸ்ட்ரோ  அவானி  கூறி  இருந்தது.

“அது  ஒன்றும்  தப்பில்லை. அதற்குக்  கட்டுப்பாடுகள்  இருந்தாலும்  உயர்ந்து  வரும்  வாழ்க்கைச் செலவினத்தைச்  சமாளிக்க  அது  ஒரு  வழி.

“அலுவலக  நேரத்தில்  வேலை  செய்து  கொண்டே  இணையவழி  வணிகத்தில்  ஈடுபடலாம்.  என்ன, வேலைக்கு  ஒழுங்காகச்  செல்ல  வேண்டும், போதுமான  தூக்கம்  வேண்டும்.

“வார  இறுதியில்கூட  அவர்கள்  வணிகத்தில்  ஈடுபடலாம்”, என  மஸ்லான்  கூறினார்.

துணை  அமைச்சரின்  கருத்தை  இணையத்திலும்  பலர்  சாடி  இருந்தனர்.