மகாதிர்: ரிம2.6பில்லியன் மற்றும் எஸ்ஆர்சி விசாரணை முடிவுகள்மீது ஏஜி நடவடிக்கை எடுக்க மாட்டார்

ignoreடாக்டர்  மகாதிர்  முகம்மட்,  ரிம 2.6 பில்லியன்  அரசியல்  நன்கொடை,  எஸ்ஆர்சி  இண்டர்நேசனல்  நிறுவனத்திலிருந்து  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  கணக்குக்கு  மாற்றிவிடப்பட்டதாகக்  கூறப்படும்  ரிம42 மில்லியன்  ஆகியவை  பற்றிய  விசாரணைகளின்  முடிவுகள்மீது  சட்டத்துறைத்  தலைவர்  அலுவலகம்  நடவடிக்கை  எடுக்காது  என்று  நினைக்கிறார்.

அவ்விரு  விவகாரங்கள்மீதும்  மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணையம் (எம்ஏசிசி)  தாக்கல்  செய்த  புலன்  விசாரணை  அறிக்கைகளைச்  சட்டத்துறைத்  தலைவர்  முகம்மட்  அப்பாண்டி  அலி  பொருட்படுத்த  மாட்டார்  என முன்னாள்  பிரதமர்  கூறினார்.

இதற்குமுன்  1எம்டிபிமீதான  பேங்க்  நெகாராவின்  அறிக்கையையே  ஒதுக்கித்  தள்ளியவர்  அப்பாண்டி. இப்போதும்  அதுதான்  நடக்கப்  போகிறது  என்றாரவர்.

“நான்  நினைக்கிறேன்  அபாண்டி இதை (எம்ஏசிசி  அறிக்கையை) நிராகரிப்பார்  என்று. இது  என்னுடைய  ஊகம் ”, என  மகாதிர்  ஃப்ரி  மலேசியா  டூடே-க்கு  வழங்கிய  நேர்காணலில்  தெரிவித்தார்.

“முன்பு  பேங்க்  நெகாராவும்  அதன் (1எம்டிபி மீதான) அறிக்கையைக்  கொடுத்தது  என்று  நம்புகிறேன். பேங்க்  நெகரா  ஒன்றும்  சாதாரண  அமைப்பல்லவே.

“துல்லியமாக  விசாரணை  செய்த  அவர்களுக்கு  விவகாரத்தை  நீதிமன்றத்துக்குக்  கொண்டு  செல்வதற்கு  ஏதோ  ஆதாரம்  கிடைத்திருக்கிறது. ஆனால், ஏஜி  ஒரேயடியாக  ஒதுக்கித்  தள்ளி  விட்டார்.

“அதனால்  இந்த  அறிக்கையையும்  ஏஜி  நிராகரித்தால்  நான்  ஆச்சரியப்பட  மாட்டேன்”, என்று  மகாதிர் குறிப்பிட்டார்.