யூரோ நெருக்கடியைச் சமாளிக்க அரசாங்கத்தின் 6 பில்லியன் ரிங்கிட் ஊக்குவிப்புத் திட்டம்

மலேசியப் பொருளாதாரம் ஐரோப்பிய கடன் நெருக்கடியின் தாக்கத்தைச் சமாளிப்பதற்கு உதவியாக 6 பில்லியன் ரிங்கிட் பெறும் ஊக்குவிப்புச் செலவுத் திட்டத்தை தயாராக வைத்துள்ளது.

இவ்வாறு இரண்டாவது நிதி அமைச்சர் அகமட் ஹுஸ்னி ஹானாட்ஸ்லா கூறியிருக்கிறார்.

“நாங்கள் இடிதாங்கியை வைத்துள்ளோம்- வரவு செலவுத் திட்ட ஏற்பாடுகளின் கீழ் 6 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஊக்குவிப்பு செலவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன,” என அவர் சொன்னதாக தி ஸ்டார் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

“பொருளாதார மந்த நிலை இல்லாவிட்டால் வலுவான வளர்ச்சியை உறுதி செய்வதற்கு அந்தத் தொகை பயன்படுத்தப்படும். மந்த நிலை ஏற்பட்டால் நமது பொருளாதாரத்தைப் பாதுகாக்க அது உதவும்.”

அரசாங்கத்திடம் அவசர நிதியாக 4 பில்லியன் ரிங்கிட்டும் உள்ளது. அத்துடன் நிலங்களை விற்பதின் மூலமும் அது நிதிகளைத் திரட்ட முடியும் என்றும் இரண்டாவது நிதி அமைச்சர் சொன்னார்.

“ஏறத்தாழ 30 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பங்குக் காப்பு நிதிகளை மறு ஆய்வு செய்யுமாறும் நாங்கள் எங்கள் கணக்காயர்களைக் கேட்டுக் கொண்டுள்ளோம்,” என்றார் அவர்.

முதலீடுகளைக் கவருவதற்கு 10 ஆண்டு கால பெரும் திட்டத்தை மலேசியா வைத்திருப்பதால் உலகப் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தாலும் வளர்ச்சிக்கு ஊக்கமூட்டுவதற்கு அவசரத் திட்டம் ஏதும் மலேசியாவுக்குத் தேவைப்படாது என பொருளாதார திட்ட அமைச்சர் நோர் முகமட் யாக்கோப் கூறியிருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியா, தனது பொருளாதாரத்திற்கு உந்து சக்தியாக மூலப் பொருட்கள் விற்பனையையும் மின்னியல் பொருட்களின் ஏற்றுமதிகளையும் பெரிதும் சார்ந்துள்ளது.

கடந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 89 விழுக்காட்டை ஏற்றுமதிகள் வழங்கின.

ராய்ட்டர்ஸ்