குலா: மத மாற்ற விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு உடனடியான தீர்வு காண வேண்டும்

indiraகடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்திரா காந்தியின் குழந்தைகள் மத மாற்றம் செய்யப்பட்ட விவகாரத்திற்கு தீர்வு காணும் பொறுப்பை மூன்று அமைச்சர்களுக்கு அளிக்கப்பட்டது. மஇகாவின் தலைவர் எஸ். சுப்ரமணியம், அம்னோக்காரர்களான முகமட் நஸ்ரி மற்றும் ஜமில் கிர் ஆகியோரே அந்த மூவர் ஆவர்.

2009 ஆம் ஆண்டில், இந்திரா காந்தியின் மூன்று சிறு குழந்தைகளை இஸ்லாத்திற்கு மத மாற்றம் செய்த பத்மநாதன் என்ற அவரது முன்னாள் கணவர் இந்திராவின் சம்மதமின்றி இஸ்லாத்திற்கு மத மாற்றம் செய்தார். இது சம்பந்தமாக இந்திரா காந்தி தொடர்ந்த சிவில் வழக்கில் அம்மூன்று குழந்தைகளையும் பராமரிக்கும் உத்தரவை இந்திரா பெற்றார். ஆனால், அவரது கணவர் இதே போன்ற உத்தரவை ஷரியா நீதிமன்றத்திடமிருந்தும் பெற்றார்.

ஈப்போ உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இந்திரா காந்தி பேராக் சமய இலாகா 2013 ஆம் ஆண்டில் மத மாற்றத்திற்கு அளித்திருந்த சான்றிதழை ரத்து செய்வதில் வெற்றி பெற்றார்.

தற்போது, மேல்முறையீட்டு நீதிமன்றம் இது ஓர் இஸ்லாமிய விவகாரம். ஆகவே, சிவில் நீதிமன்றம் மத மாற்றத்திற்கு அளித்த சான்றிதழை ரத்து செய்ய முடியாது என்று 2-1 பெரும்பான்மையில் தீர்ப்பு வழங்கயுள்ளதை நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் இன்று காராக்கில் பேசிய போது தெரிவித்தார்.

இந்திரா காந்தியின் போராட்டமும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பும் சாதாரண மலேசியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்று கூறியindira1 குலா, அமைச்சரவையும் தற்போது எதிர்வினையாற்றியுள்ளது என்றார்.

இந்த விவகாரத்திற்கு ஒரு வழி காண அமைச்சரவை மேற்கூறப்பட்ட மூன்று அமைச்சர்களை நியமித்துள்ளது. அவர்கள் சட்டத்துறை தலைவரை (ஏஜி) சந்தித்து விட்டதாகவும் தெரியவந்துள்ளது என்று குலா மேலும் கூறினார்.

இது போன்ற அமைச்சரவை குழுக்கள் 2009 மற்றும் 2013 இல் அமைக்கப்பட்டதாகத் தெரிவித்த குலா, 2009 ஆண்டில் மட்டுமே அமைச்சரவை சட்டப்படி அமலாக்கம் செய்ய இயலாத ஒரு கட்டளையை வெளியிட்டது. இக்கட்டளை ஓர் ஆலோசனை போன்றது என்பதால், அதனால் எந்த விளைவும் ஏற்படவில்லை என்றாரவர்.

இன்று வரையில் உருப்படியான எதுவும் நடைபெறவில்லை என்று தமது ஆதங்கத்தை வெளியிட்ட குலா, பல்லில்லாத குழுக்களால் ஆகவப்போவது ஒன்றுமில்லை என்றார்.

2009 ஆம் ஆண்டிலிருந்து இழுக்கடிக்கப்பட்டுவரும் இந்த சமயங்களுக்கிடையிலானா கடும்சச்சரவை இப்போது இவ்வளவு அவசரமாக தீர்க்க முனைவது ஏன் என்று பொதுமக்கள் கேட்கின்றனர் என்றார் குலா.

கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து தாம் நாடாளுமன்றத்தில் இப்பிரச்சனையை எழுப்பி வந்துள்ளதாகத் தெரிவித்த குலா, இவ்விவகாரத்தில் இதுவரையில் நடந்துள்ளதைக் காணும் போது இந்திரா காந்தி சம்பந்தப்பட்டுள்ளது போன்ற மத மாற்ற விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படும் என்று தாம் நம்பவில்லை என்றார்.

அந்த மூன்று அமைச்சர்களும் சட்டத்துறை தலைவரை சந்தித்து விட்டனராம். அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை வெளியிட வேண்டும், ஏன்னென்றால் ஒருதலைபட்சமான மத மாற்றம் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானதல்ல என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர் என்று குலசேகரன் கூறினார்.

இந்த விவகாரத்தில் அரசாங்கம் ஒரு கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டிருக்குமானால், பிரதமரே முன்னின்று இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். சர்ச்சைக்குரிய இந்த விவகாரத்தைத் தீர்ப்பதற்கு பிரதமர் அவரது அரசியல் திண்மையைக் காட்ட வேண்டும் என்பதை குலசேகரன் வலியுறுத்தினார்.