பினாங்கு எதிரணி(பிஎன்), அம்மாநிலத்துக்கான ரிம27 பில்லியன் போக்குவரத்து பெருந் திட்டம்(டிஎம்பி) இன்னும் ஆய்வுநிலையில் இருப்பதால் அதைப் பற்றிக் கருத்துரைக்க இது பொருத்தமான நேரமல்ல எனக் கருதுகிறது.
நேற்று மாநில அரசும் அத்திட்டத்தை மேற்கொள்ளவிருக்கும் எஸ்ஆர்எஸ் கொன்சோர்டியமும் அளித்த விளக்கத்தில் பிஎன் திருப்தி கொள்கிறதா என்று வினவியதற்கு மாநில எதிரணித் தலைவர் ஜஹாரா அப்துல் ஹமிட் அதற்குப் பதிலளிக்க இன்னும் காலம் கனியவில்லை என்றார்.
“முதலில் திட்டத்தை ஆராய வேண்டும்”, என்று ஜஹாரா பிஎன் சட்டமன்ற உறுப்பினர்களுக்காக நடத்தப்பட்ட விளக்கமளிப்புக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் செள கொன் இயோ-வும் எஸ்ஆர்எஸ் திட்ட நிர்வாகி ஸ்ஸேடோ வெய் லூங்-கும் அந்த விளக்கமளிப்பை நடத்தினார்கள்.
பிஎன் சட்டமன்ற உருப்பினர்கள் அந்தப் பெருந் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்களா என்று ஜஹாராவிடம் வினவப்பட்டதற்கு, “எதிர்க்க வேண்டும் என்பதற்காக எதிர்ப்பைத் தெரிவிப்பவர்கள் அல்லர் நாங்கள்”, என்றார்.
“கடலடிச் சுரங்கப் பாதை உள்பட (போக்குவரத்துப் பிரச்னைகளைச் சமாளிப்பதற்கான) இப்படிப்பட்ட திட்டம் புதிதல்ல. பிஎன் ஆட்சிக்காலத்திலேயே அது பற்றிப் பேசப்பட்டிருக்கிறது.
“கடலடிச் சுரங்கப்பாதை தேவை அல்ல என்று நினைத்தோம். ஆனால், அது பத்தாண்டுகளுக்கு முன்பு”, என்றாரவர்.
இவர் பேச்சு , பொறுப்புள்ள எதிரணி தலைவர் என்பதை காட்டுகிறது.