நீதிபதிகளை கல்நெஞ்சம் படைத்தவர்கள் என்று கூறியதற்காக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராகிம் போலீசாரால் விசாரிக்கப்படுகிறார். நீதிபதிகளை அவ்வாறு வர்ணித்ததற்காக தாம் நீதிமன்றத்தில் நிருத்தப்படும் சாத்தியம் குறித்து அவர் கவலைப்படவில்லை.
இது சம்பந்தபமாக எழும் எந்த ஒரு வழக்கும் தம்மைப் பற்றியதாக இருக்கும் என்று புத்ராஜெயாவிலுள்ளவர்கள் தவறாகக் கணக்குப் போடலாம். மாறாக, அந்த வழக்கு அவர்களைப் பற்றியதாக இருக்கும் என்று ஸைட் கூறினார்.
“நீதிபதிகள் கல்நெஞ்சர்கள்” என்று நான் கூறியிருந்ததை நான் தீவிரமாக தற்காப்பேன். அந்த நீதிபதிகள் எடுத்துக்கொண்ட பதவிப் பிரமாணத்தை, இந்திரா வழக்கில் மட்டுமல்ல, இதரப் பல வழக்குகளிலும், ஏன் நிலைநிறுத்தத் தவறி விட்டனர் என்பதற்கு நான் விளக்கம் அளிப்பேன்.”
“நீதிபதிகள் கல்நெஞ்சர்களாக இருப்பதால்தான் இவ்வளவு காலமாக மலேசியர்களுக்கு நீதி மறுக்கப்பட்டு வந்துள்ளது”, என்று ஸைட் அவரது வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக இழுக்கடிக்கப்பட்ட இந்திரா காந்தியின் குழந்தைகள் மத மாற்றம் செய்யப்பட்ட வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய பெரும்பான்மை அடிப்படையிலான தீர்ப்பினால் சினமடைந்த ஸைட் இப்ராகிம் தெரிவித்த கருத்திற்காக அவரை போலீசார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இந்திரா காந்தி வழக்கில் நீதிபதிகளின் தீர்ப்பை வாசிப்பதற்கு முன்னதாக அவர்களை குறைகூறியதற்காக ஸைட்டை தலைமை நீதிபதி அரிப்பின் ஸக்காரியா கடிந்து கொண்டார்.
சில தினங்களுக்குப் பின்னர், தலைமை நீதிபதி அரிப்பினின் கருத்துக்கு பதவி ஓய்வுபெற்ற பெடரல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கோபால் ஶ்ரீ ராம் ஆதரவு தெரிவித்தார்.
“எனது வலைப்பதிவை முறையாகப் படிக்கும்படி நான் அவர்கள் இருவரையும் முதலில் கேட்டுக்கொள்கிறேன். இப்போதெல்லாம் பெடரல் நீதிமன்றத்திலிருந்து வரும் சில தீர்ப்புகளைவிட எனது வலைப்பதிவு புரிந்துகொள்வதற்கு சுலபமானதாக இருக்கும்.
“நான் சாதாரண மக்களுக்காக எழுதுகிறேன். நான் அவர்களின் மொழியில் பேசுகிறேன். நான் அரிப்பின் அல்லது ஶ்ரீ ராம் போன்ற நல்ல அல்லது புலமை பெற்ற வழக்குரைஞாராக இருந்ததே இல்லை”, என்று ஸைட் எழுதியுள்ளார்.
இந்திரா காந்தி வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு தமக்கு வருத்தமளித்தது என்று கூறிய ஸைட், அந்தத் தீர்ப்பை வாசித்தது எனக்கு மனநிறைவு அளிக்கவில்லை, ஏனென்றால் அதன் இறுதி விளைவு தமக்கு “அருவருப்பூட்டியது” என்றாரவர்.
அடிப்படை சுதந்திரங்கள் மீது அகங்காரப் போக்கு
தமக்கு ஏமாற்றமளித்த முன்னைய தீர்ப்புகள் போல், தங்களுடைய தீர்ப்பை தற்காக்க நீதிபதிகள் தங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும், அதற்கு அவர்கள் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறுகின்றனர் என்றார் ஸைட்.
“அதற்கு முந்தையத் தீர்ப்பு காரணமாக இருக்கலாம், அல்லது (அரசமைப்புச் சட்ட) பிரிவு 121 (A), அல்லது அது ஷரியா நீதிமன்றம் சார்ந்ததாக இருக்கலாம். நாம் இவற்றை எல்லாம் முன்பே கேள்விப்பட்டிருக்கிறோம். அங்குதான் எனது கடும் சினம் தோன்றியது.
“நான் பெரும்பாலான நீதிபதிகள் கல்நெஞ்சர்கள் அல்லது தவறிழைப்பவர்கள் என்று கூறவில்லை. கடந்த பத்து ஆண்டுகளில் அடிப்படை சுதந்திரங்கள் மீதான அவர்களின் அகங்காரப் போக்கு மற்றும் நமது சட்ட அமைவுமுறையின் முக்கியமான அரசமைப்புச் சட்ட கோட்பாடுகளை வலியுறுத்தத் தவறியது போன்றவற்றுக்காக மேல்முறையீட்டு நீதிபதிகள் மீது மட்டுமல்ல, அனைத்து பெடரல் நீதிமன்ற நீதிபதிகள் மீதும் எனக்கிருந்த ஏமாற்றத்தைத் தெரிவித்தேன்.
“எம்மாதிரியான அமைவுமுறையை நாம் கொன்டுள்ளோம்?, என்பது எனது கேள்வி. நமது நாடே தோல்வி கண்டு விட்டது அல்லது அதன் ஆன்மாவை இழந்து விட்டது; அதன் விளைவாக நாம் கல்நெஞ்சம் படைத்த நீதிபதிகளைப் பெற்றிருக்கிறோம் என்று கூறினேன். ஒரு தாய் தன் மகளுடன் ஒன்பது ஆண்டுகளாக இருக்க முடியவில்லை என்றால், நமது அமைவுமுறையில் முடைநாற்றம் வீசுகிறது”, என்று ஸைட் இப்ராகிம் மேலும் கூறினார்.
மேல்முறையீட்டு நீதிமன்றம் 2014 ஆம் ஆண்டில் பெடரல் நீதிமன்றம் ஹஜி ராய்மி அப்துல்லா வழக்கில் அளித்தத் தீர்ப்புக்கு கட்டுப்பட்டிருக்கலாம்.அதில் தமக்கு சிரத்தை என்றாரவர்.
நீதிபதிகள் இந்திராவுக்கு நீதி வழங்குவதற்கு வகைசெய்யும் பெடரல் நீதிமன்றம் 2007 ஆம் ஆண்டில் லத்தீபா மாட் ஸின் வழக்கில் அளித்த தீர்ப்பை ஏன் மேல்முறையீட்டு நீதிபதிகள் பின்பற்றவில்லை என்று ஸைட் வினவினார்.
“இப்போதெல்லாம் மாநில சட்டத்தைவிட பெடரல் சட்டத்திற்கான, ஷரியா சட்டத்தைவிட சிவில் சட்டத்திற்கான முதன்மையை வலியுறுத்தும் முயற்சிகளை நான் காணவில்லை.
“இந்திரா வழக்கில் நடந்ததைப் போல், வழக்குகளில் ஷரியா மற்றும் அரசமைப்புச் சட்ட கோட்பாடுகளுக்கிடையில் மோதல் ஏற்படும் போது, இந்த நீதிபதிகள் காணும் ஒரு சுலபமான வழி முஸ்லிம் அல்லாதத் தரப்பினர் பரிகாரம் காண்பதற்கு ஷரியா நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும் என்பதாகும். அதுதான் எனக்குச் சினத்தை மூட்டியது”, என்று அவர் மேலும் கூறினார்.
2014 ஆம் ஆண்டில், பெடரல் நீதிமன்றம் ஹஜி ரய்மி அப்துல்லா வழக்கில் அளித்தத் தீர்ப்புதான் பிரச்சனைக்குக் காரணம் என்று ஶ்ரீ ராம் வாதிப்பதாக ஸைட் கூறினார்.
அப்படியே இருக்கலாம். ஆனால், அப்பிரச்சனையின் தொடக்கம் என்ன என்பது பற்றி தமக்கு கவலையில்லை என்றாரவர்.
“இவற்றை எல்லாம் தொடக்கியது அந்த ரய்மி வழக்கின் கல்நெஞ்சம் படைத்த நீதிபதிகள்தான். அது இப்போது நம்மை மிக அண்மைய இந்திரா வழக்கின் தீர்ப்புக்கு கொண்டு வந்துள்ளது. அதுதான் நான் அனைவரையும் கல்நெஞ்சம் படைத்தவர்கள் என்று வர்ணிப்பதற்கு இட்டுச் சென்றது. அது நடந்தவற்றை அடிப்படையாகக் கொண்ட எனது கருத்து, என்று ஸைட் இப்ராகிம் கூறினார்.
உங்கள் கருத்து ம இ கா அம்னோவுக்கு நெத்தியடி.தர்மம் என்றாவது ஒருநாள் வெல்லும்.
உங்கள் சினத்தில் நியாயம் உள்ளது ஸைட் ! மனித நேயம் உள்ள நீதிமான்கள் மட்டுமே இப்படி தைரியமாக பேச முடியும்!! பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற கேள்விக்கு விடையாக நீங்கள் இருக்கிறீர்கள் !!!. மகிழ்ச்சி.
சைட் அவர்களுக்கு வாழ்துக்கள் , மனித நேயம் என்றால் என்ன என்று .
”ஒருசில நல்ல உள்ளங்கள் இருக்கின்றது. உங்கள் கருத்தை தலைமை நீதிபதிக்கு நல்லா உரைக்கும்படி எடுத்து சொல்லுங்கள். ………………..(சைட் அவர்களுக்கு வாழ்துக்கள்)
மானிடம் தழைக்க அங்கங்கே ஒரு சில மனசாட்சி உள்ள மனிதர்கள் இருப்பதற்கு சான்று சைட் அவர்கள் நன்றி வாழ்த்துக்கள் .
இது ஒரு உண்மை இவர் பற்றி – அதாவது நான் சுமார் 6 வருடங்களு முன்பு கோத்தபாரு மாநிலத்தில் வேலை செய்த சமயம் என் முஸ்லிம் நண்பர் அலுவலக குமாஸ்தாவாக வேலை செய்தற் அப்போது என் முஸ்லிம் நண்பர் ரொம்பவும் சிரம்பதில் இருந்த சமயம் இவரை ஸைட் இப்ராகிம் சென்று சாந்தித்து இருக்கிறார். இந்த ஸைட் இப்ராகிம் உடனடியாக அவரின் வீடு சென்று அந்த வீட்டிற்திற்கு தேவையான அத்தினை பொருட்களையும் வாங்கி கொடுததாக சொன்னார் என் அந்த முஸ்லிம் நண்பர். அப்போது அவர் அரசியலில் இல்லை. இன்றும் அந்த நல்ல உள்ளம் அப்படியே உள்ளது.
மனிதநேயம் மறத்து விடவில்லை என்பதற்கு நீங்கள் ஒரு நல்ல சான்று.மிக்க நன்றியும்.வேற்றினத்தவராகவும் இசுலாமியராகவும் இருக்கும் நீங்கள் ஓர் இந்து பெண்மணிக்கு நிதி நிலை நாட்டப்பட வேண்டும் உறுதியாக இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.ஆளும் கூட்டணியில் இந்துக்கள் என்று மார்தட்டிக்கொள்ளும் எம்மவர்கள் நாற்காலியை இறுக பிடித்திக்கொண்டு வாயை மூடிக்கொண்டிருக்கிறார்கள்.என்ன செய்வது?
திரு சைட் அவர்களே உங்களைப்போல் மற்ற மலாய்க்காரர்கள் இருந்தால் இந்த நாடு என்றோ எங்கேயோ போய் இருக்கும்– உண்மையான இன ஒற்றுமை இருக்கும். உங்களைபோன்ற மலாய்க்காரர்கள் மிகவும் குறைவு–