குழந்தை மதமாற்று விவகாரத்தில் இந்திராகாந்திக்கு வழங்கப் பட்டத் தீர்ப்பு இந்நாட்டுப் பெண்கள் அனைவருக்கும் இழைக்கப்பட்டுள்ள அநீதியாகும். இனிவரும் காலத்தில் சிவில் சட்டப்படி நடந்த திருமணங்களை மிக எளிய முறையில் செல்லாதவையாக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் இத்தீர்ப்பே முன்னோடியாக விளங்கவுள்ளதை அனைத்து மலேசியர்களும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றார் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
இஸ்லாமியர் அல்லாதார் குடும்ப அமைப்பை முற்றாகச் சீரழிக்கும் ஒரு அசாதாரண நிலையை இத்தீர்ப்பு வழங்கியுள்ளது என்றால் அது மிகையாகாது. அதனைப் பிற அரசியல் விவகாரங்களைப் போல் மிகச் சாதாரணமான ஒன்றாக எடுத்துக் கொள்ளாமல் மிகக் கவனமாகக் கையாள வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.
இந்தத் தீர்ப்பினால், திருமணத்துக்குப் பின் தம்பதிகளின் கூட்டு வாழ்வில் பெற்ற பிள்ளைகள் உட்பட இருவரின் உழைப்பாலும் சேர்க்கப் பட்ட அனைத்துச் செல்வங்களையும் ஒரு பெண் இழந்தவராகிறார். பெற்றத் தாயிக்கு தன் குழந்தை மீது இருக்கும் உரிமையை இழக்க வேண்டிய கொடுமைக்கு ஒரு சமயத்தைக் காரணமாக்குவதற்கு இத்தீர்ப்பு வழி வகுத்துள்ளது.
மலேசிய மக்கள் நாட்டின் நீதிமன்றங்களின் மீது வைத்திருந்த நம்பிக்கைக்குப் பாதகம் விளைவிப்பதைப் போன்று இந்தத் தீர்ப்பு அமைந்து விட்டது. நீதி தேவதையின் கண்கள் கட்டப் பட்டிருப்பதற்கு அர்த்தமில்லாமல் ஆக்கி விட்டது, நமது நீதிபதிகளின் தீர்ப்பு.
இந்தச் சட்டத்தின் கடுமையை உணர்ந்தே மத மாற்றம் மீதான ஒரு திருத்தம் கொண்டுவர 2009ம் ஆண்டு முதல் அமைச்சரவையின் பரிசீலனையில் இருப்பதாக அரசாங்கத்தின் பங்காளியான ம.இ.கா பல முறை பத்திரிக்கை செய்தியில் கூறி வந்தது, ஆனால் இந்திரா காந்திக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு அவர்களின் அறிக்கைகள் எல்லாம் வெறும் அரசியல் நாடகமா என்ற வினாவை எழுப்பியுள்ளது.
கடந்த ஏழு வருடங்களாக அதனைப் பரிசீலித்த அமைச்சரவைக் குழு என்ன செய்தது, என்பதை விளக்க வேண்டியவர் அக்குழுவில் அங்கம் வகித்துவரும் ம.இ.காவின் தலைவரும், அமைச்சருமான டாக்டர் எஸ். சுப்பிரமணியம். ஆனால் தீர்ப்புக்குப் பிறகு அட்டர்னி ஜெனரலைச் சந்திக்க மூன்று அமைச்சர்களைக் கொண்ட குழுவை அமைத்திருப்பதாக அறிக்கை விடுவது ஏன்? இது மற்றொரு அரசியல் நாடகமா?
பிரதமர் நஜிப்பின் ஒரே மலேசியக் கொள்கை என்னவானது? ஏழு வருடங்களாக அமைச்சர்கள் ஆழ்ந்த நித்திரையிலா இருந்தனர். இல்லை பிரதமர் நஜிப்புக்கு திருத்தம் கொண்டு வருவதில் விருப்பம் இல்லையா? தீர்ப்பு வந்த பின் நாட்டு மக்களை வேறுபடுத்திக் குளிர் காயலாம் என்று எண்ணியிருந்தாரா அவர்?
இவர்கள் நாட்டில் சமத்துவத்துக்காக, மக்களின் நல்வாழ்வுக்காக எதுவும் செய்யமாட்டார்கள் என்பதை பல முறை எடுத்துக் கூறியுள்ளோம். ஆனால் அதனையும் தாண்டி தீமை மட்டும் செய்வதற்காகவே காத்திருப்பவர்கள் என்பதை அவர்கள் காட்டிவிட்டனர்.
இஸ்லாமியர் அல்லாதார் குடும்பங்களில் இருக்கும் பிணைப்புக்கும்,உறவுக்கும் வேட்டு வைக்கும் கொடிய நிலைப்பாட்டினை கொள்கையாக கொண்டவர்களின் கூடாரம் இந்த அரசாங்கம், என்பதனைப் பிரதமர் நஜிப் மக்களுக்கு உணர்த்தி விட்டார் என்றார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
1975 ம் ஆண்டு முசுலிம் அல்லாதாருக்கான ஏகாதார திருமண சட்டம் அமுலுக்கு கொண்டு வர அரசாங்கம் முன் வந்தபோது : அன்றைய சமூக தலைவர்களும் இந்த மத மாற்று பிரச்சனைகளினால் எதிர் காலத்தில் ஏற்படும் தொல்லைகள் குறித்து விரிவாகவே விளக்கி இருந்தனர், அதில் அண்ணன் சா. ஆ. அன்பாநந்தனின் பங்கு குறிப்பிடதக்கது ! ஆனாலும் அன்றைய ஆளும் கட்சியிலுள்ள நம்ம அரசியல் வாதிகள் இதை காதில் போட்டுகொள்ளவே இல்லை.!!!
நல்லா சொன்னாலும் சரியாய் சொன்ன உங்களுக்கு எனது வாழ்துக்கள் .
ம இ க காரர்களின் கையால் ஆகாததனத்தை சொல்லவே வேண்டாம் இந்திர என்ன அவர்களுக்கு அக்காவா, தங்கையா போராடுவதற்கு அதற்கும் ஒரு தைரியம் வேண்டும் இவர்கள் எல்லாம் ………………?
சுயநல கூடாரம் ம இ கா . மக்கள்தான் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட போராடவேண்டியுள்ளது.மக்கள் சேவகன் என்ற பெயரில் சுயநல கொள்கை என்பது ம இ கா வின் பச்சோந்திகள்.இனி வரும் காலங்களில் விழிப்பாக இருப்பது மக்களின் கடமை.பச்சோந்தி அரசியல்வாதிகள் நம்பாமல் தன்னால் உரிமைகளை அறிந்துகொள்வது மக்களின் எதிர்காலம்.