மலேசிய பயனீட்டாளர் சங்கச் சம்மேளம்(போம்கா) பயனீட்டாளர்கள் தங்களின் “வாங்கும் சக்தி”யை ஒன்றுதிரட்டி அதைச் சரியான முறையில் பயன்படுத்தி வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் எழுகின்ற சவால்களை எதிர்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.
“பயனீட்டாளர்கள் அவர்களின் உள்ளார்ந்த சக்தியைக் குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது. அவர்களால் வியாபாரிகளையும் வணிகத்தையும் உருவாக்கவும் முடியும் உடைத்தெறியவும் முடியும்”, என போம்கா துணைத் தலைவர் முகம்மட் யூசுப் அப்துல் ரஹ்மான் கூறினார்.
உழைப்பாளர்களுமான பயனீட்டாளர்கள் தத்தம் தொழிற்சங்கங்களின்கீழ் ஒன்றிணைந்து பொருள்களை மொத்தமாக வாங்கலாம், அப்படி வாங்கும்போது பொருள்கள் கழிவு விலையில் -குறைந்த விலையில்- கிடைக்கும்.
இன்றைய சூழலில் பயனீட்டாளர்கள் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தேசிய பொருளக ஊழியர் சங்கம் (என்யுபிஇ) கேட்டுக்கொண்டிருப்பதை வழிமொழிவதாகவும் அவர் சொன்னார்.
போக்குவரத்துச் செலவைக் குறைக்க காரில் ஒன்றுசேர்ந்து பயணித்தல், உல்லாசப் பயணங்களைக் குறைத்தல் போன்ற வழிகளிலும் ரின்கிட்டை மிச்சப்படுத்தலாம் என என்யுபிஇ அண்மையில் கூறியிருந்தது.
வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்காக தொழிலாளர் அமைப்புகளுடன் மட்டுமல்லாமல் சமூக அமைப்புகளுடனும் இணைந்து பாடுபட போம்கா தயாராக இருப்பதாய் முகம்மட் யூசுப் கூறினார்.