பாஸுக்கும் பார்டி அமானா நெகாராவுக்குமிடையில் வாய்த் தகராறு தொடர்கிறது. பாஸ், கொடுத்த “வாக்குறுதியைக் காப்பாற்றாத” கட்சி என்று அமானா சாடியுள்ளது.
அமானா, பாஸைப் போன்று நடந்து கொள்ளாது என்று அமானாவின் ஷா ஆலம் எம்பி காலிட் சமட் குறிப்பிட்டார். அது கொடுத்த வாக்கைக் காக்கும், புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் பக்கத்தான் ஹராபானுக்கு என்றும் விசுவாசாக இருக்கும்.
“நாங்களும் உங்களைப் போல் இருப்போம் என்று நினைத்தீர்களா? ஒப்பந்தத்தை மீறுவீர்கள், பிறகு ‘அதை நாங்கள் முழுமனதோடு ஏற்கவில்லை’ என்பீர்கள்.
“நாங்கள் கொடுத்த வாக்கைக் காப்போம். ஒழியட்டும் அம்னோ”, என காலிட் டிவிட்டரில் பாஸ் ஆய்வு மைய இயக்குனர் முகம்மட் ஸுஹ்டி மர்சூகிக்குப் பதிலடி கொடுத்திருந்தார்.
முகம்மட் ஸுக்டி, பார்டி ஹராபான் நீண்ட நாள் இருக்காது ஏனென்றால், அதில் இணைந்துள்ள கட்சிகள் ‘முழுமனதோடு’ ஒப்பந்தத்தை ஏற்கவில்லை என்று கடந்த வார இறுதியில் கூறி இருந்தார்.