கெராக்கான்: இந்திரா விவாகாரம் பற்றி விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் வேண்டும்

 

Gerakan calls for sitting of parliamentமுஸ்லிம் அல்லாத பெற்றோரின் சம்மதமின்றி சிறுவர்கள் மத மாற்றம் செய்யப்படுவது குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று கெராக்கான் இளைஞர் பிரிவுத் தலைவர் எண்டி யோங் கேட்டுக்கொண்டுள்ளார்.

“இம்மாத இறுதியில் டிரான்ஸ் பசிபிக் பங்காளித்துவ ஒப்பந்தம் (டிபிபிஎ) குறித்து விவாதிப்பதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நடத்துவதற்கு பதிலாக இந்நாட்டில் தனித்து நின்று அவதிப்படும் இந்திரா காந்தியின் வழக்கு குறித்து விவாதிக்க ஒரு சிறப்பு நாடாளுமன்ற கூட்டம் நடத்த வேண்டும்”, என்று வழக்குரைஞருமான யோங் கூறுகிறார்.

இந்திரா காந்தியின் வழக்கிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தாமே இது போன்ற சில வருந்தத்தக்க வழக்குகளைக் கையாண்டுள்ளதாக கூறிய யோங், இது பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் கடுந்துயரை ஏற்படுத்துகிறது என்று மேலும் கூறினார்.

இந்திரா காந்தி விவகாரத்தில் பிரச்சனை என்ன என்பது தெரிந்ததே. சட்ட நடவடிக்கை என்பது நிலைமையை இன்னும் மோசமாக்கலாம். எதுவும் செய்யாமல் இருப்பதற்கு மாறாக, நாடாளுமன்றம் அதன் பங்கையாற்ற வேண்டும் என்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.