ஜைட்டின் ‘இதயமற்ற நீதிபதிகள்’ கட்டுரை தொடர்பில் ஸ்டார் செய்தி ஆசிரியரிடம் போலீஸ் விசாரணை

heaமுன்னாள்  அமைச்சர்  ஜைட்  இப்ராகிம்  மீதான  விசாரணையின்  ஒரு  பகுதியாக  போலீஸ்,  சண்டே  ஸ்டார்  ஆசியரியர்  எஸ்தர்  இங்-கிடம்  நேற்று  விசாரணை  நடத்தினர்.

விசாரணை சுமார்  45  நிமிடத்துக்கு  நீடித்ததாக  த  ஸ்டார்  ஆன்லைன்  தெரிவித்தது

இங்குடன்  வழக்குரைஞர்  அமிர்  ஹம்சாவும்  சென்றிருந்தார்.

“போலீசுக்கு  முழு  ஒத்துழைப்பு  கொடுத்தோம்”, என அமிர்  தெரிவித்ததாக  அச் செய்தித்தளம்  கூறிற்று.

ஜைட்,  டிசம்பர்  31-இல்,  அவரது  வலைப்பக்கத்தில்  பதிவிட்டிருந்த  ‘இந்திரா, உங்களுக்காக  என்  இதயம்  அழுகிறது’ என்ற  கட்டுரைக்காக   போலீஸ்  விசாரணைக்கு  ஆளாகியுள்ளார்.அக்கட்டுரை  த  ஸ்டாரிலும்  வெளியிடப்பட்டிருந்தது.

ஜைட்  அக்கட்டுரையில்,  எம். இந்திரா  காந்தி  வழக்கில்  முறையீட்டு  நீதிமன்றம்  வழங்கிய  தீர்ப்பைக்  குறை  கூறியிருந்தார்.

முறையீட்டு  நீதிமன்றம், இந்திரா  தம்  குழந்தைகள்  முஸ்லிமாக  மதம்  மாறிய  தம்  முன்னாள்  கணவரால்   தன்மூப்பாக  இஸ்லாத்துக்கு  மதம்  மாற்றப்பட்டது  செல்லாது  என்று  அறிவிக்கக்  கோரி  செய்திருந்த  மனுவை  நிராகரித்ததுடன்  அவர் தம்  பிரச்னைக்கு  ஷாரியா  நீதிமன்றத்தில்தான்  தீர்வுகாண வேண்டும்  என்றும்  தீர்ப்பளித்திருந்தது.

ஜைட், தீர்ப்பளித்த  நீதிபதிகளை  இதயமற்றவர்கள்  என்று  வருணித்தார். இது  தலைமை  நீதிபதிக்கு  ஆத்திரமூட்டியது.

அக்கட்டுரை  தொடர்பில்  கடந்த  செவ்வாய்க்கிழமை  ஜைட்டை  போலீஸ்  விசாரணை  செய்தது.