மத மாற்று விவகாரங்களில் சுப்ரமணியம் உண்மையைச் சொல்கிறாரா?, குலா கேட்கிறார்

 

kulaசிவில் சட்டப்படி திருமணம் புரிந்துகொண்ட தம்பதிகளுக்கிடையில் மத மாற்றம் காரணமாக ஏற்படும் குழந்தை பராமரிப்பு தகராறு சிவில் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்று அமைச்சரவை கொள்கையளவில் மீண்டும் தெரிவித்திருப்பதாக சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் மீண்டும் கூறியுள்ளது குறித்து டிஎபி ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் பல கேள்விகளை எழுப்பினார்.

2009 ஆம் ஆண்டில், இவ்விவகாரம் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட போது, அப்போது இக்குழுவின் உறுப்பினராக இருந்த டாக்டர் சுப்ரமணியம் இவ்விவகாரம் சம்பந்தமாக தேவைப்படும் சட்டங்கள் தாக்கல் செய்யப்படும் என்று கூறினார். ஆனால், அவ்வாறு ஏதும் செய்யப்படவில்லை, இதற்கு ஆட்சியாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததாக கூறப்படுகிறது என்று குலசேகரன் மேலும் கூறினார்.

 

ஆலோசனை நடத்தப்படுவது இல்லை

 

எந்தச் சட்டம் திருத்தப்படுவதற்கு பரிசீலிக்கப்படுகிறது என்பது பற்றி எல்லாம் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறப்படுவதும் இல்லை, ஆலோசனை கேட்பதும் இல்லை என்றாரவர்.

“நாங்கள் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம், ஆனால் எங்களிடம் எதுவும் தெரிவிப்பதில்லை”, என்று கூறிய குலா, முன்னைய திருத்தத்திற்கு ஆட்சியாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தால், அது மீண்டும் ஏற்பட்டால் என்ன ஆகும் என்பதுதான் மக்களின் கேள்வி என்று மேலும் கூறினார்.

ஆட்சியாளர்கள் தெரிவித்திருந்ததாக கூறப்படும் எதிர்ப்பு சம்பந்தப்பட்ட சட்ட திருத்தங்கள் மற்றும் பிரச்சனைகள் என்ன என்று தெரியப்படுத்தினால் அது சம்பந்தமாக தாங்களாலான உதவியை அளிக்க முடியும் என்றார் குலா.

 

ஏஜியின் பகைமைப் போக்கு

 

இந்த மதங்களுக்கிடையிலான விவகாரத்தில் டாக்டர் சுப்ரமணியகம் உண்மையைச் சொல்கிறாரா என்று குலா கேட்கிறார்.

இக்கேள்விக்கான காரணம், மதங்கிடையிலான விவகாரங்களில் சிவில் நீதிமன்றம்தான் நீதி வழங்க வேண்டும் என்பது அரசாங்கத்தின்subra நிலைப்பாடும் கொள்கையும் என்றால், மத மாற்ற பிரச்சனைகளில் சிவில் நீதிமன்றத்தின் அதிகாரத்தை சட்டத்துறை தலைவரின் அலுவலகம் (ஏஜி) மறுப்பது ஏன்?

2009 ஆம் ஆண்டில், இந்திரா காந்தியின் மூன்று குழந்தைகளை அவர்களின் தகப்பனார் பத்மநாதன் மத மாற்றம் செய்தார். அம்மூன்று குழந்தைகளும் இந்த மத மாற்றத்தில் நேரடியாகச் சம்பந்தப்படவில்லை. அவர்களின் பிறப்பு ஆவணத்தைக் கொண்டே மத மாற்றம் செய்யப்பட்டது. அக்குழந்தைகளின் பராமரிப்பை ஷரியா நீதிமன்றம் மதம் மாறிய தகப்பனாரிடம் ஒப்படைத்தது.

இந்த ஷரியா நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த போது, ஏஜி மதம் மாறிய தகப்பனாரை உயர்நீதிமன்றத்திலிருந்து பெடரல் நீதிமன்றம் வரையில் ஆதரித்தது. 2009 ஆம் ஆண்டில், இந்திரா காந்தி ஈப்போ உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததிலிருந்து இன்று வரையில் ஏஜி இந்திராவுக்கு எதிராகச் செயல்பட்டு வந்துள்ளார் என்று விவரித்த குலசேகரன், டாக்டர் சுப்ரமணியம் கூறியதிலிருந்து பார்க்கும் போது, இந்திரா காந்தி நீதிமன்றங்களில் நடத்திய போராட்டங்களுக்கு ஏன் ஏஜி ஆதரவு அளிக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. உண்மையில், சுப்ரமணியம் கூறியிருந்ததற்கு எதிர்மாரான நிலைப்பாட்டை ஏஜி எடுத்துள்ளார். இந்திரா மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஏஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என்று குலா விளக்கினார்.

 

அமைச்சரவையின் பாசாங்கு

 

இந்த விவகாரத்தில் நமது அரசாங்கத்தின் உறுதியற்ற, பாசாங்கு நிலைப்பாட்டை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். ஏஜியின் நிலைப்பாட்டை டாக்டர் சுப்ரமணியம் அறிவாரா? அல்லது, அது குறித்து எதுவும் செய்ய இயலாத நிலையில் இருக்கிறாரா? அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சர் சுப்ரமணியம் ஏஜியின் சந்தேகத்திற்குரிய நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்புவாரா? அல்லது அதிலிருந்து தப்பித்துக்கொள்ள வழி தேடுவாரா என்று குலா கேட்கிறார்.

 

அமைச்சரவை அதன் வலிமையைக் காட்ட வேண்டும்

 

முதல்படியாக, விரைவில் பெடரல் நீதிமன்றத்தில் வரவிருக்கும் இந்திரா காந்தியின் அனுமதி கோரும் மனுவை ஏஜி ஆதரிப்பதற்கான indiragandhiஅவரது ஒப்புதலை அமைச்சர் சுப்ரமணியம் பெற வேண்டும். இது சாத்தியமில்லை என்றால், அமைச்சரவை ஏஜிக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான வலிமையற்றதாகக் கருதப்படும் என்றார் குலா.

மேலும், ஏஜி அலுவலகம் அரசாங்கத்திற்கு சட்ட ஆலோசனை வழங்கும் அமைப்பாகும் என்பதைச் சுட்டிக் காட்டிய குலசேகரன், அவர்கள் ஏன் அரசாங்கம் மற்றும் அமைச்சரவை ஆகியவற்றின் கொள்கைகளை ஆதரித்து தற்காப்பதில்லை என்று அவர் வினவினார்.

அரசாங்கத்தின் கொள்கைகள் யாருடைய கட்டுப்பாடு மற்றும் கட்டளைக்கு உட்பட்டிருக்கிறது என்று குலசேகரன் கேட்டார்.

ஒட்டுமொத்த அமைச்சரவையும் “குட்டி நெப்போலியன்களின்” ஆதிக்கத்திற்கும் அவர்களின் தொலைவிலிருந்து கட்டுப்படுத்தும் சக்திக்கும் உட்பட்டுள்ளதா என்று குலா மேலும் வினவினார்.