ஸ்ரீடெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். இராயரின் வழக்குரைஞர் கோபிந்த் சிங் டியோ, தம் கட்சிக்காரர்மீது சுமத்தப்பட்டுள்ள தேச நிந்தனைக் குற்றச்சாட்டை ஆட்சேபித்து அவர்மீதான வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென பினாங்கு செஷன்ஸ் நீதிமன்றத்தில் வாதிட்டார்.
2014, மே மாதம் சட்டமன்றத்தில் “செலாக்கா” என்ற சொல்லைப் பயன்படுத்தியதற்காக இராயர்மீது தேச நிந்தனைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கூட்டரசு அரசமைப்பு சட்டவிதி 72(2), தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் சட்டமன்றப் பேச்சுகளுக்குச் சட்டவிலக்கு அளிப்பதைக் குறிப்பிட்டு அதன் அடிப்படையில் ஆட்சேபனை தெரிவிப்பதாக கோபிந்த் சிங் கூறினார்.
அதேவேளை, சட்டவிதி 72(4) சட்டமன்ற உறுப்பினர் நிந்தனைக்குரிய சொல்களைப் பயன்படுத்தினால் அச்சட்டவிலக்கு மீட்டுக்கொள்ளப்படும் என்று கூறுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
“இராயர் பயன்படுத்திய சொல் நிந்தனைக்குரிய சொல்தானா என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். இல்லை என்றால் அவருக்குச் சட்டவிலக்குக் கிடைக்க வேண்டும்”, என பூச்சோங் எம்பியுமான கோபிந்த் கூறினார்.