கெடா எம்பி முக்ரீஸை பதவியிலிருந்து வெளியேற்ற அம்னோவின் வெளிப்படையான போர்!

 

mukriz defiesகெடா மாநில மந்திரி புசார் முக்ரீஸ் மகாதிரை அவரது பதவியிலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகள் இப்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன.

மாநில மந்திரி புசார் முக்ரீஸுக்கு எதிரான வெளிப்படையான போரை கெடா அம்னோ துணைத் தலைவர் அஹமட் பாஷா ஹனிப் இன்று தொடங்கினார். மாநில அம்னோ உறுப்பினர்கள் கெடா மாநில மந்திரி புசாரின் தலைமைத்துவத்தில் நம்பிக்கை இழந்து விட்டனர் என்று அவர் பிரகடனம் செய்தார்.

பிரதமர் நஜிப் இந்த விவகாரத்தில் தலையிட்டு மந்திரி புசார் பதவியிலிருந்து முக்ரீஸை மாற்ற வேண்டும் என்று ஹனிப் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

 

“நான் மக்களின் மந்திரி புசார்”

 

அம்னோவின் கோரிக்கைக்குப் பணிய மறுத்த முக்ரீஸ், தாம் மக்கள் அளித்த அதிகாரத்துடனும் மாநில சுல்தானின் ஒப்புதலுடனும் நியமனம் பெற்ற மந்திரி புசார் என்று பதவி விலகக் கோரியவர்களுக்கு எதிர்வினையாற்றினார்.

அவரது எதிரிகளின் கோரிக்கையை ஏற்று முக்ரீஸ் பின்வாங்குவார் என்பதற்கான அறிகுறி ஏதும் முக்ரீஸின் பதில் அறிக்கையில் காணப்படவில்லை.

 

“ஹிடுப் முக்ரீஸ், ஹன்சுர் நஜிப்”

 

முக்ரீஸை கவிழ்க்கும் முயற்சிக்கு எதிராக ஆயிரத்திற்கு மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் கெடா அம்னோ தலைமையகம்1000 supporters அமைந்திருக்கும் பாங்குனான் துங்கு அலோர் சீதார் முன்பு கூடினர்.

முக்ரீஸுக்கு ஆதரவு தெரிவிக்கும் பதாதைகளை ஏந்தி நின்ற அவர்கள் “ஹிடுப் முக்ரீஸ்” என்று முழங்கிக் கொண்டிருந்தனர்.

சிலர் பிரதமர் நஜிப்புக்கு எதிரான அவர்களுடைய சினத்தை “ஹன்சுர் நஜிப்” என்று கோஷமிட்டுக் காட்டினர்.

முக்ரீஸ் சுமார் இரவு மணி 9.50 அளவில் அங்கு வந்து சேர்ந்தார். அவரை மகிழ்ச்சி ஆரவாரத்துடன் அங்கு கூடியிருந்த ஆதரவாளர்கள் வரவேற்றனர். அவருடன் கைகுலுக்கவும் முயன்றனர்.