ரபிஸி: சுதந்திரமாக செயல்படும் சிறப்பு அரசு வழக்குரைஞர் தேவை

prosecபிகேஆர் எம்பி ரபிஸி ரம்லி,   நாடாளுமன்றம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு எதிரான வழக்குகளை மீண்டும் விசாரிக்கவும் மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) முறையீடு செய்யுமானால் அதன்மீது நடவடிக்கை எடுக்கவும் சுதந்திரமாக செயல்படும் அரசு வழக்குரைஞர் ஒருவரை நியமனம் செய்ய வேண்டும் என விரும்புகிறார்.

“சட்டமும் நாடாளுமன்ற விதிகளும்  இதற்கு இடமளிக்குமா  என்பதைப்  பார்க்க வேண்டும், ஏனென்றால் இதற்குமுன்  இது செய்யப்பட்டதில்லை”, என்றாரவர்.

எம்ஏசிசி சிறப்பு நடவடிக்கை இயக்குனர் முகம்மட் பாஹ்ரி ஸின், வழக்குகளை முடித்துக்கொள்ளும் ஏஜி-இன் முடிவுக்கு எதிராக ஆணையம் முறையீடு  செய்யக்கூடும்  என்று கூறி இருப்பதை   அடுத்து  ரபிஸி  இவ்வாறு   தெரிவித்தார்.

“எஸ்ஆர்சி-இல்  பணத்தை மாற்றி விடுவதற்கு அனுமதி அளித்த   அதிகாரிகளின்   பெயர்களை  வெளியிட வேண்டும் என்பதை நான் தொடக்கத்திலிருந்தே வலியுறுத்தி   வருகிறேன். அதிகாரிகளின் வரிசை   நிதி அமைச்சரான நஜிப்வரை நீளும்.

“நிதி அமைச்சர் என்ற   முறையில்   நஜிப், ரிம42 மில்லியன்    மாற்றிவிடப்படுவதற்கு   அனுமதி அளிக்கப்பட்டதை அறிந்தே  இருப்பார். எவ்வகையிலும் அவர்மீது நம்பிக்கை மோசடி(சிபிடி) குற்றம் சாட்ட வலுவான காரணம் இருக்கிறது.

“பணம் மாற்றிவிடப்பட்டதை அறிந்திருந்தால் அல்லது அதற்கு அவரே அனுமதி அளித்திருந்தால் அவர்மீது   சிபிடி குற்றம் சுமத்தலாம்.

“அவரே கூறிக்கொள்வதுபோல்   அவர்   அதை அறியாமலிருந்திருந்தால்,   எஸ்ஆர்சி-இன் மீஉயர் அதிகாரி என்ற முறையில் கடமையில் கவனக்குறைவாக இருந்து எஸ்ஆர்சி-இன் பண இழப்புக்குக் காரணமாக  இருந்தார்   என்பதற்காக அவர்மீது   வழக்கு தொடுக்கப்பட வேண்டும்”, என ரபிஸி கூறினார்.

அதனால்தான்   இந்த வழக்குகள் ‘தெளிவானவை” என்று எம்ஏசிசி அதிகாரி கூறி இருப்பது தமக்கு வியப்பை அளிக்கவில்லை என்றாரவர்.

“எம்ஏசிசி முறையீடு செய்தால் ஏஜி நடவடிக்கை எடுக்காமல் இருந்து விடுவாரோ என்பதுதான் கவலையாக இருக்கிறது”, என ரபிஸி குறிப்பிட்டார்.

ஆனாலும், சட்டத்துறைத் தலைவரின் அறிவிப்பால் விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டதாக நஜிப் நினைப்பாரானால் அது தவறு என்றும் பாண்டான் எம்பி கூறினார்.