சுவீஸ் ஏஜி ஜாஹிட்டின் ‘அரசியலில்’ இழுக்கப்படுவதை விரும்பவில்லை

swissagமலேசிய  அரசு தொடர்புடைய  முதலீட்டு  நிறுவனமான 1எம்டிபி மீதான  விசாரணையில்  மலேசிய  சட்டத்துறைத்  தலைவர்  ஒத்துழைப்பார்  என்பதில்  “திருப்தி”  கொள்வதாக  சுவீஸ்  சட்டத்துறைத் தலைவர்  கூறினார்.

அவரது  ஊடக  அறிக்கையில்  அவர்  இதைத்  தெரிவித்தார்.

“பரஸ்பர  உதவி   கேட்டு  சுவிட்சர்லாந்து  விடுத்த  வேண்டுகோளை  ஏற்று  முழுமையான  ஒத்துழைப்பு  அளிக்கக்  கட்ப்பாடு  கொண்டிருப்பதாக மலேசிய  சகா  கூறியது    மனநிறைவைத்  தருகிறது”, என  சுவிட்சர்லாந்து  சட்டத்துறைத்  தலைவர்  அலுவலகம்  மலேசியாகினிக்கு  அனுப்பிய  மின்னஞ்சல்  கூறியது.

அதேவேளை,  விசாரணை  நடப்பதாக    பத்திரிகை  அறிக்கை  விடுத்தது    முறையற்ற  செயல்  எனத்  துணைப்  பிரதமர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி  குறிப்பிட்டிருப்பது  பற்றி சுவீஸ்  ஏஜி  அலுவலகம்  கருத்துரைக்க  மறுத்தது.

சுவீஸ்  ஏஜி  அலுவலகம்  விசாரணைக்கு   உதவிகேட்டு பத்திரிகையில்  அறிக்கை  விடுக்காமல்  “அதிகாரப்பூர்வமான”  வழிகளில்  கேட்டுக்கொண்டிருக்க  வேண்டும்  என  ஜாஹிட்  கூறியிருந்தார்.

“சுவிட்சர்லாந்து  சட்டத்துறைத்  தலைவர்  அலுவலகம்  பல்வேறு  ஊடகங்களிலும்  வந்து  கொண்டிருக்கும்  அறிக்கைகளைக்  கவனித்துக்  கொண்டுதான்  இருக்கிறது.

“சட்ட  அமலாக்கத்  துறை  அத்துடன்  நீதித்  துறை  என்பதால்   சுவிட்சர்லாந்து  சட்டத்துறை  அலுவலகம்  அரசியல்  அறிக்கைகளுக்குப்  பதில்  சொல்வதில்லை”,  என்று  அது  குறிப்பிட்டது.