‘முக்ரிசை மாற்றுவதால் நாட்டுக்கு நன்மை இல்லை; பிரதமரை மாற்றினால்தான் நன்மை’

mafகெடா  மந்திரி  புசாரை  மாற்றுவதைவிட  பிரதமரை  மாற்றுவதே  நாட்டுக்கு  அதிக  நன்மையைக்  கொண்டு  வரும்  என்கிறார்  பாஸ்  நாடாளுமன்ற  உறுப்பினர்  ஒருவர்.

கெடாவில்  நிலவும்  அரசியல்  குழப்பநிலைமீது  கருத்துரைத்தபோது  பொக்கோக்  சேனா  எம்பி  மாபுஸ்  ஒமார்  அவ்வாறு  கூறினார்.

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  பலவீனங்களாலும்   தவறுகளாலும்  பெரிய  விளைவுகள்  உண்டாகுமா,  கெடா  மந்திரி  புசார்  முக்ரிஸ்  மகாதிரின்  பலவீனங்களால்  பெரிய  தவறுகள்  உண்டாகுமா  என்றவர்  வினவினார்.

“முக்ரிசை  அகற்றுவது  நாட்டின்  பொருளாதாரத்துக்கு  நன்மையைக்  கொண்டு  வரப்போகிறதா?

“முக்ரிசுக்கு  எதிரான  புத்ரா  ஜெயாவின்  அரசியல்  திட்டம்   பொருளாதாரத்தை  மீட்சியுற  வைத்து,  நாணயத்தை  வலுப்படுத்தி,  நாட்டின்  வருமானத்தை  அதிகரிக்கப்  போகிறதா?

“மலேசியாமீது  வெளிநாட்டு  முதலீட்டாளர்களின்  நம்பிக்கையைத்  திரும்பப்  பெற  அது  உதவுமா?  முக்ரிசை  அகற்றுவது   மக்கள்  எதிர்நோக்கும்  வாழ்க்கைச்  செலவின  உயர்வைக்  குறைக்கப்  போகிறதா?”,  எனக்  கேள்விகளாக  அடுக்கினார்  மாபுஸ்.

கெடா  மக்களுக்கு  அடுத்து  வரப்போகும்  மந்திரி  புசார்  பற்றி  கவலை  இல்லை.

“மந்திரி  புசாரை  மாற்ற வேண்டிய  அவசியம்  என்னவென்றுதான்  கெடா  மக்கள்  கேட்கிறார்கள்.

“நஜிப்  கெடா  மக்களின்  விருப்பத்தைப் புரிந்து  கொள்ளாமலிருப்பதுதான்  ஏன்  என்று  எனக்குப்  புரியவில்லை”, என்றார்.