பள்ளிக்கூடங்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும். அங்கு அரசியல் கட்டுப்பாடுகள் கூடாது.
இதை முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின் இப்போது உணர்ந்திருப்பார். நேற்று சுபாங் ஜெயா, ஸ்கோலா மெனாங்கா கெபாங்சான் யுஎஸ்ஜே4-இல் முகைதின் உரையாற்றச் சென்றபோது அங்கு அவர் பேசுவதற்குத் தடை விதிக்கப்பட்டது அவருக்கு நல்லதொரு பாடமாகும்.
“பள்ளிகளை அரசியல் கருவிகளாக பயன்படுத்தக் கூடாது என்பதை இப்போது அவர் உணர்ந்திருப்பார் என்று நம்புகிறேன். பள்ளிகளைச் சுதந்திரமாக இருக்க விடுங்கள் என்பதை அப்போதிருந்தே நாங்கள் கூறி வந்திருக்கிறோம்”, என சிலாங்கூர் சட்ட மன்றத் தலைவர் ஹன்னா இயோ இன்று அவரது முகநூல் பக்கத்தில் கூறி இருந்தார்.
இயோ, பள்ளிகளில் பேச அனுமதிக்கப்படாத அரசியல்வாதிகளின் மன்றத்தில் சேர முகைதினுக்கு அழைப்பு விடுத்தார்.
“எங்கள் மன்றத்தில் சேர உங்களை அழைக்கிறோம். 2008-இலிருந்தே பக்கத்தான் ஹராபான் பிரதிநிதிகள் இந்த அநீதியைக் கவனப்படுத்தி வந்திருக்கிறார்கள்”, என்றாரவர்.
இயோவுக்கும் அந்த அனுபவம் உண்டு. 2008-இல், சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினரான பின்னர், தாம் கல்வி பயின்ற சுபாங் உத்தாமா இடைநிலைப் பள்ளியில் உரையாற்றச் சென்றபோது அவர் பேசுவதற்கு அனுமதிக்கப்படவில்லை.
இன்றும்கூட அவர் எந்தப் பள்ளிக்கும் சென்று விட முடியாது. காசோலைகள் கொடுப்பது உள்பட, ஏதாவது உதவி செய்வதாக இருந்தால் பள்ளிக்கு வெளியில் இருந்துதான் செய்ய வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டார்.

























