அப்படியானால் மைபிபிபி-க்கு பழனிவேலைத் தலைவராக்க வேண்டியதுதானே: கேவியஸுக்கு வேள்பாரி பதிலடி

velமஇகா  முன்னாள்  தலைவர்  ஜி.பழனிவேல்  ஒரு  பெருந்  தலைவர்  என்று   மைபிபிபி  தலைவர்  எம். கேவியஸ்   கருதுவாரானால்  அவர், தம்  கட்சித்  தலைமைப்  பொறுப்பிலிருந்து  விலகி  பழனிவேலைத்  தலைவராக  ஆக்கி  விடலாமே  என்று  மஇகா  மத்திய  செயல்குழு  உறுப்பினர்  எஸ்.வேள்பாரி   கிண்டலடித்துள்ளார்.

நேற்று,  கேவியஸும்  பிஎன்னுக்குத்  தோழமை  பாராட்டும்  அரசியல்  கட்சிகளும்   இந்திய,  வர்த்தக,  தொழிலியல்  சம்மேளனமும் (மைக்கி)  ஒன்று  சேர்ந்து  பழனிவேலுக்கு  ஆதரவு  தெரிவித்தனர்,  அவரே  மஇகா-வின்  சட்டப்பூர்வ  தலைவர்  என்றும்  மொழிந்தனர்.

மஇகா  புதிதாக  தேர்தல்  நடத்த  வேண்டும்  என்ற  சங்கப்  பதிவக  ஆணையை  எதிர்த்து  நீதிமன்றம்  சென்றதால்  பழனிவேல்  மஇகா-விலிருந்து  விலக்கப்பட்டார்.

“பழனிவேல்  திறமைமிக்க  தலைவர்  என்று  நீங்கள்  கருதினால்  ஏன்  நீங்கள்  அனைவரும்  மைபிபிபி  கொடியின்கீழ்  ஒன்றுகூடி  மைபிபி  தலைமைப்  பொறுப்பை  பழனிவேலிடம்  ஒப்படைக்கக்கூடாது?”, என  வேள்பாரி  ஓர்  அறிக்கையில்  வினவினார்.

பழனிவேல் கட்சியிலிருந்து  நீக்கப்பட்டதை  அடுத்து  மஇகா  புதிதாக  தேர்தல்  நடத்தி  டாக்டர்  எஸ்.சுப்ரமணியத்தைத்  தலைவராக  தேர்ந்தெடுத்தது.  அதைச்  சங்கப்  பதிவகமும் (ஆர்ஓஎஸ்)  ஏற்றது.

ஆனால்,  கேவியஸின்  அறிக்கையைப்  பார்க்கையில்  ஒரு  பதிவுபெற்ற  அமைப்புக்கு  ஆர்எஸ்எஸ்ஸின்  அங்கீகாரம்  மட்டும்  போதாதுபோல்  தெரிகிறது  என  வேள்பாரி  குறிப்பிட்டார்.

“பிரதமரும்  பிஎன்னும்  டாக்டர்  சுப்ரமணியத்தைத்  தலைவராக  ஏற்றுக்கொண்டார்கள்.  ஆனால்,  கேவியஸ்  மைபிபிபி-இன்  அங்கீகாரம்  கிடைக்காதவரை   பிரதமரின்  அங்கீகாரமோ  ஆர்ஓஎஸ்ஸின்  அதிகாரமோ  செல்லாதுபோல்  அல்லவா  தெரிகிறது.

“அமைச்சரவை அப்படி  எதுவும்  சட்டம்  கொண்டு  வந்திருக்கிறதா, என்ன. அறிந்துகொள்ள  ஆசையாக  இருக்கிறது”, என்றாரவர்.