முன்னாள் அமைச்சர் சைட் இப்ராகிம், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீது வழக்குத் தொடுப்பதில்லை என்று சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அபாண்டி அலி செய்துள்ள முடிவை நீதிமுறை மேலாய்வுக்கு எடுத்துச் செல்கிறார்.
“நீதிமுறை மேலாய்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டு உயர்நீதி மன்றத்தில் மனு செய்திருக்கிறேன்”, என்று சைட் தெரிவித்தார்.
பிரதமர் நஜிப்மீது வழக்கு தொடுப்பதில்லை என்று சட்டத்துறைத் தலைவர் செய்த முடிவையும், விசாரணைகளை நிறுத்துமாறு சட்டத்துறைத் தலைவர் மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி) த்துக்கு இட்ட உத்தரவையும் மேலாய்வு செய்ய அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வழக்கின் உண்மைகளையும் சந்தர்ப்பச் சூழ்நிலைகளையும் புறக்கணித்துவிட்டு ஒரு மனிதர் செய்யும் முடிவுக்கு எதிராகக் கேள்வி எழுப்பக்கூடாது என்றால் நாட்டில் சட்ட ஆளுமை என்னாவது என்று சைட் வினவினார்.
“எனக்கு ஆலோசனை கூறியவர்கள் ‘கேள்வி கேட்பாடற்ற விருப்பப்படி தீர்மானிக்கும் உரிமை.’ என்ற ஒன்று சட்டத்தில் இல்லை என்றே அறிவுறுத்தியுள்ளனர். விருப்பப்படி தீர்மானிக்க்கும் கட்டற்ற உரிமை என்பதே சட்ட ஆளுமைக்கு எதிரான கருத்தாகும். அதனால்தான் நான் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளேன்”, என்றார்.