நஜிப் தலைமையில் அம்னோ பலவீனமடைந்துள்ளது: சாடுகிறார் முக்ரிஸ்

weakபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக் தலைவராக  இருக்கும்வரை  அம்னோ  பலவீனமாகத்தான்  இருக்கும்  என்று   முக்ரிஸ்  மகாதிர்  காட்டமாகக்  குறிப்பிட்டார்.

கெடா  மந்திரி  புசார்  பதவியிலிருந்து  விலகுவதை  அறிவிப்பதற்காகக்  கூட்டப்பட்டிருந்த  செய்தியாளர்  கூட்டத்தில்  முக்ரிஸ்   பேசினார்.

“இதைச்  சொல்ல  வருத்தமாக  உள்ளது. நஜிப் உள்ளவரை  அம்னோ  இப்போதிருப்பதைப்போல்  மிகவும்  பலவீனமாகத்தான்  இருக்கும்”, என்றார்.

“ஊழலுக்குமேல்  ஊழல்.  தாங்க  முடியவில்லை.  நம்மை  வாட்டி  வதைக்கிறது. வெளிநாடுகளில்  தலைநிமிர்ந்து  நடக்க  முடியவில்லை”, என்றவர்  சொன்னார்.

அம்னோவில்  மூன்று  மில்லியனுக்குமேல் உறுப்பினர்கள்  இருந்து  என்ன  பயன்.  யாராலும்  தலைவருக்கு  எதிராக  எதுவும் சொல்ல  முடிவதில்லை.

கடந்த  ஆண்டு  அம்னோ  ஆண்டுக்  கூட்டமே  அதற்குச்  சான்று  என  முக்ரிஸ்  குறிப்பிட்டார். அதில்  அம்னோ  மரபுகள்  மீறப்பட்டு  நஜிப்  மட்டுமே  முதலிலும்  முடிவிலும்  பேசினார்.

வழக்கமாக, கூட்டத்தின்  முடிவில்  தலைவருடன்  துணைத்  தலைவர்,  உதவித்  தலைவர்கள்,  இளைஞர்  தலைவர்  ஆகியோரும்  பேசுவார்கள்.

“இந்தச்  சிறுபிள்ளைத்தனம் (நஜிப்பின்)  தொடக்கவுரையிலும்  காணப்பட்டது. கூட்டத்தில்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  (அம்னோ)  துணைத்  தலைவர்  போன்ற  முக்கிய  பெருமக்களும்  இருந்தனர். அவர்களுக்கு  உரிய  அங்கீகாரம்  கொடுக்கப்படவில்லை”,  என  முக்ரிஸ்  கூறினார்.