முக்ரிசை ஆதரித்த எக்ஸ்கோ-கள் தூக்கப்படுவார்களா?

excoகெடாவின்  முன்னாள்  மந்திரி  புசார்  முக்ரிஸ்  மகாதிருக்கு  ஆதரவாக  நடந்துகொண்ட  மாநில  ஆட்சிக்குழு  உறுப்பினர்  மூவர் பதவி  இழப்பர்  என்று  வதந்திகள்  உலவுகின்றன.

இது  பற்றி  புதிய  மந்திரி  புசார்  அஹ்மட்  பாஷா  முகம்மட்  ஹனிபாவிடம்  வினவியதற்கு  “இதுவரை  அப்படி  எதுவும்  இல்லை”  என்றார்.

அம்மூவரும்  ஆட்சிக்குழுவில்  தொடர்வார்களா  என்று  கேட்டதற்கு “இனிமேல்தான்  ஆராய  வேண்டும்”  என்று  பாஷா  கூறினார்.

அமினுடின்  ஒமார்,  சுராயா  யாக்கூப்,  நோர்சப்ரினா  முகம்மட்  நூர்  ஆகியோரே  அம்மூவருமாவர்.

இன்று  காலை  புதிய  எம்பி-ஆக  பதவியேற்ற  பின்னர்  பாஷா  செய்தியாளர்களிடம்  பேசினார்.

அப்போது  அவரிடம்  36-பேர்  கொண்ட  சட்டமன்றத்தில்  அவருக்குப்  பெரும்பான்மை  ஆதரவு  இருக்கிறதா  என்று  வினவப்பட்டது.

“நான்  இங்கே   இருக்கிறேன்  என்றால்,  பெரும்பான்மை  ஆதரவு  இருக்கிறது  என்றுதானே  அர்த்தம்”, எனப்  பட்டென்று  பதிலளித்தார்.

கெடா  அரசமைப்பின்படி  அவர்  அரசாங்கம்  அமைக்க  19  சட்டமன்ற  உறுப்பினர்களின்  ஆதரவு  தேவை.

17பிஎன்  சட்டமன்ற உறுப்பினர்களின்  ஆதரவுதான்  பாஷாவுக்கு  இருப்பதாகக்  கூறப்படுகிறது. முக்ரிசை  4 பிஎன்  உறுப்பினர்களும்  பாஸின்  சட்டமன்ற  உறுப்பினர்  எண்மரும்  பிகேஆரின்  நால்வரும்  ஆதரிக்கிறார்களாம்.

எஞ்சிய மூன்று  சட்டமன்ற  உறுப்பினர்களில்  இருவர்  டிஏபி-இனர்,  ஒருவர்  அமானாவைச்  சேர்ந்தவர்.  அவர்கள்  நடுநிலை  வகிக்க  முடிவு  செய்திருக்கிறார்கள்.