சர்ச்சைக்குரிய வலைப்பதிவரான வான் அஸ்ரி வான் டெரிஸ், வெளிநாட்டவர் ஒருவரை அடிப்பதைக் காண்பிக்கும் காணொளி தொடர்பில் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுமக்கள் சற்று பொறுமை காக்க வேண்டும் என்றும் தேசிய போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் கூறினார்.
பாபாகோமா என்ற பட்டப் பெயரில் பிரபலமாக விளங்கும் வான் அஸ்ரி, தன் சகோதரிகளைப் பாலியல் தொந்திரவு செய்த வெளிநாட்டவர் ஒருவரை “அறைவதையும் குத்துவதையும் உதைப்பதையும்” காண்பிக்கும் நான்கு- நிமிட காணொளி ஒன்ரு இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
“போலீசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் தாக்கப்பட்டவரை அழைத்து வருமாறும் பாபாகோமாவைக் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.
“அடிப்பட்டதாகக் கூறப்படுபவரையும் விசாரிக்க வேண்டியுள்ளது. ஆனால், அந்தச் சாட்சியைக் கண்டுபிடிக்க முடியவில்லை”, என காலிட் இன்று பினாங்கில் கூறினார்.
காணொளிதான் எல்லாவற்றையும் தெளிவாகக் காண்பிக்கிறதே அது போதாதா என்று வினவியதற்கு, “பாதிக்கப்பட்டவரையும் பார்க்க வேண்டும்” என்றார்.
ஒருவர் இன்னொருவரை அடிப்பதாகக் காண்பிக்கும் காணொளியை வைத்து நடவடிக்கை எடுத்துவிட முடியாது. சட்டப்படிதான் எதையும் செய்ய முடியும். அப்போதுதான் நீதி நிலைநாட்டப்படும் என்றார்.
“பொறுத்திருங்கள். (பாபாகோமாவுக்கு எதிராக) நடவடிக்கை எடுப்பது உறுதி”, என்று காலிட் சொன்னார்.