மேலும் அதிகமான இளைஞர்கள் அரசியலில் பங்கேற்க வர வேண்டும் என்று இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் விடுத்துள்ள வேண்டுகோளை பிகேஆர் இளைஞர் பகுதி வரவேற்றுள்ளது.
அதன் தேசிய துணைத் தலைவர் டாக்டர் அபிப் பஹார்டின், மலேசிய இளைஞர் ஆராய்ச்சிக் கழகம் கடந்த ஆண்டில் வெளியிட்ட மலேசிய இளைஞர் குறியீடு, இளைஞர்களில் 46.34 விழுக்காட்டினர் அரசியல் குறித்து அதிருப்தி கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டிருப்பதை கைரிக்கு நினைவுபடுத்தினார்.
“கைரியின் அழைப்பை நான் வரவேற்கிறேன். அதே வேளையில் இளைஞர்களுக்குக் கூடுதல் சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும் என்று விரும்புவோருக்கு ஆதரவாகவும் அவர் குரல் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
“இளைஞர்களிடையேயும் எல்லா மலேசியரிடையேயும் அச்சம் என்ற கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவரவும் அவர் பாடுபட வேண்டும்”, என அபிப் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
“பேச்சுரிமையும், கல்விக்கழகச் சுதந்திரமும், சிந்திக்கும் சுதந்திரமும்தான் இளைஞர்கள் அரசியலில் ஈடுபட ஊக்குவிக்கும்”, என்றாரவர்.