WSJ குற்றச்சாட்டு பொய் என்றால் அதன்மீது உடனடி நடவடிக்கை எடுப்பீர்: பிரதமருக்கு வலியுறுத்து

wsjவால்  ஸ்திரிட்  ஜர்னல்(WSJ)  மீண்டும்  சுமத்திய  குற்றச்சாட்டு  பொய்யாக  இருப்பின்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக் உடனடியாக  அதன்மீது  சட்ட  நடவடிக்கை  எடுக்க  வேண்டும்.

“WSJ   இரண்டாவது  முறையாக  பொய்யான  குற்றச்சாட்டைக்  கூறியிருக்கும்  பட்சத்தில்  அதன்மீது  வழக்கு  தொடுக்குமாறு  மக்கள்  பிரதமரைக்  கேட்டுக்கொள்கின்றனர்”, என  அமானா  வியூக  இயக்குனர்  டாக்டர்  சுல்கிப்ளி  அஹ்மட்   ஓர்  அறிக்கையில்  கூறினார்.

“நஜிப்  WSJமீது  சட்ட  நடவடிக்கை  எடுக்கத்  தவறினால்  நாட்டினதும்  மக்களினதும்   நலன்  கருதி  அவர்  பிரதமர்,  நிதி  அமைச்சர்  பதவிகளை  உடனடியாக  துறத்தலே  நல்லது”,  என  சுல்கிப்ளி  குறிப்பிட்டார்.

பிப்ரவரி   12-இல்,  WSJ நிதியியல்  செய்தியாளர்  கென்  பிரவுன்,   நஜிப்பின்  வங்கிக்  கணக்கில்  இருந்த  ரிம2.6பில்லியன்  சவூதி  அரச  குடும்பத்தினர்  வழங்கிய  நன்கொடை  என்று  சட்டத்துறைத்  தலைவர்  முகம்மட்  அபாண்டி  அலி  கூறியிருந்ததை  மறுத்தார்.

அவர்  மறுத்துரைத்தது  ஒரு  கடுமையான  குற்றச்சாட்டு  என்றும்  அது  ஏற்கனவே  கெட்டுப்போய்க்  கிடக்கும் நாட்டின்  நற்பெயரை  மேலும்  கெடுக்கும்  என்று  சுல்கிப்ளி  கூறினார்.

மேலும்,  கடந்த  ஆண்டு  ஜூலையில்   அந்த  யுஎஸ்  திதியியல்  ஏடு  முதன்  முதலாக  நஜிப்புக்கு  எதிராகக்  குற்றம்  சாட்டியிருந்தது  என்றும்  அதற்கெதிராகக்கூட  இதுவரை  சட்ட  நடவடிக்கை  எடுக்கப்படவில்லை  என்பதையும்   சுல்கிப்ளி  சுட்டிக்காட்டினார்.