‘ஆடை அணியாத சக்கரவர்த்தியின் கதை நினைவிருக்கிறதா?’-ரபிடா

rafபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  அரசாங்கத்தின்  குறைபாடுகளைச்   சுட்டிக்காட்டினால்  குறை  கூறும்  அம்னோ  தலைவர்களை  நோக்கி  ‘ஆடை  அணியாத  சக்கரவர்த்தி  கதை  நினைவிருக்கிறதா’  எனக்  கேட்கிறார்  அம்னோ  மூத்த  தலைவர்  ரபிடா  அசீஸ்.

“ஒரு  மாறுபட்ட  கருத்தையோ  கேள்விகள்  கேட்பதையோ  அரசுக்கு  எதிரான  செயலாகக்  கருதுவது  எப்போதிருந்து?

“ஒருவர்  விரும்புவதைச்  சொல்லும்  ‘நண்பர்கள்’  பலர்  இருப்பார்கள்.  ஆனால்,   உண்மையான  நண்பர்கள்தான்  வருவது  வரட்டும்  என்று  உள்ளதை  உள்ளபடியே  சொல்லத்  துணிவார்கள்.

“ஆடை  அணியாத  சக்கரவர்த்தியின்  கதை  நினைவிருக்கிறதா?”,  என  ரபிடா  தம்  முகநூல்  பக்கத்தில்  வினவி  இருந்தார்.

அந்தக் கதையில்  சக்கரவர்த்தி  ஒருவருக்குப்  புதுமையான  ஆடை  தைத்துக்கொடுப்பதாகக்  கூறிய  தையல்காரர்  அந்த  ஆடை  சாதாரணமாகக்  கண்ணுக்குத் தெரியாது  என்றும்  அறிவாளிகளின்  கண்களுக்கே  தெரியும்  என்றும்  கூறி  வைப்பார்.  சக்கரவர்த்தி  ஆடை  எதுவும்  அணியாதிருந்த  போதிலும்  மக்கள்  அனைவரும்  தங்களை  அறிவாளிகளாகக்  காண்பித்துக்  கொள்ளும்  ஆசையிலும்  சக்கரவர்த்தியின்  கோபத்துக்கு  அஞ்சியும் அவரது ஆடையைக்  கண்டபடி  புகழ்ந்து  தள்ளுவார்கள்.  ஒரு  சிறுமி  மட்டுமே  ‘ஐயோ,  மன்னர்  அம்மணமாக  இருக்கிறார்’  என்று  சொல்லி  உண்மையைப்  போட்டு  உடைக்கும்.

ஆக்கப்பூர்வமான  விமர்சனங்கள்  நல்லெண்ணத்துடனும்  நாட்டின்மீது  கொண்டுள்ள  பாசத்தின்  காரணமாகவும்  முன்வைக்கப்பட்டிருக்கின்றன.  அவற்றை  ஏற்றுக்கொள்ள  வேண்டும்  என்று  ரபிடா  கூறினார்.

“கடந்த  காலத்தில்  என்ன  நடந்தாலும்  அதை  நான்  சகித்துக்  கொண்டிருந்ததாகக்  கூறாதீர்கள்.

“அது  உண்மை  அல்ல. நான்  என்றும்  ‘ஆமாம்  சாமி’  ஆளாக  இருந்ததில்லை. அதை  அனைவரும்  அறிவர்”,  என்றாரவர்.