எம்டியுசி: பதிவுபெறாதிருக்கும் அன்னிய தொழிலாளர்கள் எப்படி நாட்டிற்குள் வந்தனர்?

mtபதிவு  செய்யப்படாத  அன்னிய  தொழிலாளர்கள்  மிகப்  பெரிய  எண்ணிக்கையில்  இருப்பதாகவும்  அவர்கள்  எப்படி  நாட்டுக்குள்  வந்தார்கள்  என்பதையும்  அவர்களைக்  கொண்டுவந்த  “கயவர்கள்”  யார்  என்பதையும்  கண்டறிய  அரச  விசாரணை  ஆணையம் (ஆர்சிஐ)  அமைக்கப்பட  வேண்டும்  என்றும்  மலேசியத்  தொழிற்சங்கக்  காங்கிரஸ்  (எம்டியுசி)  கோரிக்கை  விடுத்துள்ளது.

வெளிநாட்டுத்  தொழிலாளர்களின்  வருகை  முடக்கி  வைக்கப்பட்ட மறுநாளே  சட்டவிரோத  அன்னிய  தொழிலாளர்களுக்கு  எதிராக மேற்கொள்ளப்பட்ட  நடவடிக்கையில்  சுமார்  ஆயிரம்  பேர்  பிடிபட்டனர்  என  எம்டியுசி  தலைமைச்  செயலாளர்   என்.கோபாலகிருஷ்ணன்  கூறினார்.

“இது  வெளிநாட்டுத்  தொழிலாளர்கள்  பெரிய  எண்ணிக்கையில்  இங்கு  இருப்பதைக்  காண்பிக்கிறது.  எனவே,  புதிதாக  வெளிநாடுகளிலிருந்து  தொழிலாளர்களைக்  கொண்டு  வருவதை  விடுத்து  இவர்களைச்  சட்டப்பூர்வ  தொழிலாளர்களாக  மாற்ற வேண்டும்.

“அத்துடன்,  மலேசியா  மேன்மேலும்  அதிகமான  வெளிநாட்டுத்  தொழிலாளர்களைக்  கொண்டுவரும்  எண்ணத்தைக்  கைவிட்டு  நம்  நாட்டு  இளைஞர்கள்  ஏன்  அந்த  வேலைகளைச்  செய்வதில்லை, என்றும்   அப்படியே செய்தாலும்   ஏன் நீண்டகாலம்  நிலைத்திருப்பதில்லை  என்பதையும்  விரிவாக  ஆராய  வேண்டும்”, என்றும்  கோபாலகிருஷ்ணன்  கேட்டுக்  கொண்டார்.