இராகவன்: மலேசிய மக்களின் தாய்மொழிகள் நாட்டு மக்கள் அனைவராலும் மதிக்கப்பட வேண்டும்

 

motherநமது நாடு மலேசியா ஒரு பன்மொழி நாடாகும். நமது நாட்டு மக்களின் தாய்மொழிகள் நாட்டு மக்கள் அனைவராலும் மதிக்கப்பட வேண்டும் என்று நேற்று பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற உலகத் தாய்மொழி தினம் கொண்டாட்ட நிகழ்ச்சியில் உரையாற்றைய தமிழ் அறவாரியத்தின் தலைவர் இராகவன் அண்ணாமலை கூறினார்.

 

“இனம், சமயம் அல்லது நிறம் ஆகிய வேறுபாடின்றி நாம் இன்று உலகத் தாய்மொழித் தினத்தைக் கொண்டாட இங்கு குழுமியுள்ளோம்” என்று கூறிய அவர் தமிழ் அறவாரியத்தின் சார்பில்  அந்நிகழ்ச்சிக்கு வருகையளித்திருந்த அனைவரையும் மகிழ்ச்சியோடு வரவேற்றார்.

 

உலகத் தாய்மொழித் தினம் 1999 ஆம் ஆண்டில் ஐநா மன்றத்தின் யுனெஸ்கோ அமைப்பால் அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு இனத்தின் தாய்மொழியும் பாதுகாக்கப்பட்டு, மேன்படுத்தப்பட்டு, பயன்படுதப்பட வேண்டும் என்பதை உணர்த்துவது உலகத் தாய்மொழி தினக் கொண்டாட்டத்தின் குறிக்கோளாகும்.  மலேசியாவில் உலகத் தாய்மொழித் தினம் தமிழ் அறவாரியத்தின் முன்னெடுப்பில் 2012 ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இப்போது நாம் உலகத் தாய்மொழித் தினத்தை ஜிபிஎம் என்ற மக்கள் செயல்திட்ட கூட்டமைப்பு உறுப்பினர்களான லிம் லியன் கியோக் கலாச்சார மற்றும் மேம்பாட்டு மையம், கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் சீன அசெம்பிளி ஹால் மற்றும் இக்ராம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து கொண்டாடுகிறோம். எதிர்காலத்தில் இன்னும் பல அமைப்புகள் நம்முடன் இணைந்து உலகத் தாய்மொழித் தினத்தை இந்நாட்டில் கொண்டாட முன்வருவர் என்று நம்புகிறோம் என்றாரவர்.

 

தாய்மொழி நமது ஆன்மா ஆகும். அதனை நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் பயன்படுத்தி, மேம்படுத்தி, பாதுகாக்க வேண்டும் என்று இராகவன் வேன்டுகோள் விடுத்தார்.

 

வேற்றுமை வேண்டாம்

 

“நமது நாடு மலேசியா ஒரு பன்மொழி நாடாகும். நமது நாட்டு மக்களின் தாய்மொழிகள் நாட்டு மக்கள் அனைவராலும் மதிக்கப்பட வேண்டும். அவற்றை கற்க, கற்பிக்க, பயன்படுத்த, மேம்படுத்த வேண்டிய அனைத்தையும் நமது அரசாங்கம் எவ்வித வேறுபாடின்றி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் நாம் இவ்வாண்டின் உலகத் தாய்மொழி தினத்தைக் கொண்டாடுவோம்”, என்று இராகவன் மேலும் கூறினார்.