தாய்மொழி பயிலுவதை நிறுத்த திட்டமிட்டே கட்டம் கட்டமாக பல தடைகளை அரசாங்கம் விதித்து வருகிறது; அமைச்சர் சுப்ராவின் நிலைப்பாடு என்ன?

 

kulaஇடை நிலைப்பள்ளிகளில் தாய் மொழிக் கல்வி என்பது எட்டாதக்  கனியாகிவிடுமோ என்று அஞ்வேண்டிய நிலையில் இந்திய சமுதாயம் இப்பொழுது உள்ளது என்று வருத்தப்படுகிறார் நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன்.
இது குறித்து தமக்குக் கிடைத்த புகார்கள் பற்றி கூறிய குலா, “நிறைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் இடைநிலைப்பள்ளிகளில் தமிழை ஒரு பாடமாக எடுப்பதற்கு பல தடைகள் இருப்பதாக குறை கூறுகின்றனர்”, என்றார்.

சிக்கனம் என்று சொல்லி கல்வி அமைச்சு பகுதி நேர தாய்மொழி (POL) வகுப்பில் கைவைத்துவிட்டது என்றும், அதற்கு எடுத்துக்காட்டாக, பாகாங் மாநிலத்தில் மட்டும் ரிம 4 இலட்சமாக இருந்த நிதி ஒதுக்கீடு இப்பொழுது வெறும் ரிம20 ஆயிரமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

தாய்மொழி பயிலுவதை நிறுத்த  இந்த நடப்பு அரசாங்கம் திட்டமிட்டே கட்டம் கட்டமா பல தடைகளை விதித்து வருகிறது என்பதை குலா வலியுறுத்தினார்.

ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் போதுமான மாணவர்கள் இல்லை என்று கூறி வந்த கல்வி அமைச்சு இப்பொழு  நிதி போதவில்லை என்று இன்னொரு காரணத்தையும் சேர்த்துக்கொண்டுள்ளது என்பதைச் சுட்டிக் காட்டிய அவர், தேவைக்கேற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்படாதது ஏன் என்று குலா வினவினார்.

பல அரசாங்கத் துறைகளில் அளவுக்கதிகமான  ஊழியர்கள் இருக்கிறார்கள். சிக்கனம் பற்றி பேசும் அரசு அளவுக்கு அதிகமான அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான  நடவடிக்கை எதுவும் எடுக்காமல் ஓர் இனத்தின் மொழியை அழிக்க முயற்சிப்பது துரோகமாகும் என்று குலசேகரன் அரசாங்கத்தைச் சாடினார்.

“கல்வி அமைச்சு சமயக் கல்வி பயில ஒரே ஒரு மாணவன் மட்டுமே இருந்தாலும்  அம்மாணவனுக் கென சமய ஆசிரியர் ஒருவரை நியமிக்கிறது. இது பாராட்டுகுரிய ஒன்று, ஆனால், அதே வேளையில்  தாய்மொழிக் கல்வியை கற்க விரும்பும் மாணவர்களுக்கு அங்கு தேவையான  15 மாணவர்கள் இருந்தும் கூட  நிதி இல்லை என்ற சாக்கு போக்கு சொல்லி தாய்மொழிக் கல்வி கற்பித்தலை நிறுத்துவது  மிகவும் கண்டிக்கத்தக்கது”, என்று குலசேகரன் அவரது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இந்தப் பிரச்சனை வருடா வருடம் தொடர்கிறது என்று கூறிய குலா, ம,இ,கா தலைவரும்,  அமைச்சரவையில்  இடம் பெற்றிருக்கும் ஒரே இந்திய அமைச்சருமான  டாக்டர் எஸ்.சுப்ரமணியம் இதைப் பற்றி அக்கறை கொள்வதாகத் தெரியவில்லை என்றார்.mic

அமைச்சரவையில் சுப்ரமணியம்தான் இது குறித்து  குரல் எழுப்ப வேண்டும். மலேசிய இந்தியர்களில் பெரும்பாலோனோர் பேசும், வாசிக்கும், பயின்ற மொழி தமிழாகும். ம.இகாவில் அனேகமாக  எல்லாரும் தமிழ் பேசக்கூடியவர்கள். அவர்கள் நடத்தும் கூட்டத்தின் பிரதான மொழியே தமிழ். ம.இ.கா கட்சியின் அஸ்திவாரமே தமிழாகத்தான் இருக்கிறது. அப்படிப்பட்ட தகுதி கொண்ட மொழி சிறிது  சிறிதாக அரிக்கப்படு அழிக்கப்பட்டால் , மஇ.கா என்ற ஒரு கட்சி வருங்காலத்தில் இருக்குமா என்பதே  சந்தேகம்தான். இதை  நடப்புத் தலைவர் உணர்கிறாரா என்பது தெரியவில்லை என்று குலா மேலும் கூறினார்.

“தமிழ்மொழியை ஆணிவேராகக் கொண்ட ஒரு கட்சியின் தலைவராக இருக்கும் டாக்டர் சுப்ரமணியம், அந்த தமிழ் அழிவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளைத் தகற்பதற்குத்  துடித்தெழுந்திருக்க வேண்டிய முதல் நபராக இருந்திருக்க வேண்டும்! நான் தமிழன், தமிழ் என் மொழி  என்ற  உணர்வு சுப்ராவிற்கு எங்கே போனது ? வரும் புதன் கிழமை நடைபெறும்  அமைச்சரைக் கூட்டத்தில் சுப்ரா இதனை பிரதமர் கவனத்திற்குகொண்டு சென்று ஒரு நிரந்தர தீர்வை காணவேண்டும்”  என கேட்டுக் கொள்கிறேன் என்றார் குலா.

நியாயமான தீர்வு வரவில்லை என்றால் இந்திய மக்களின் பார்வை மஇகாவை விட்டு  எதிர் கட்சியை நோக்கி படையெடுக்கும் அல்லது பாரிசானில் நுழைய எந்தேரமும் தயாராக இருக்கும் ஐ பி எப் கட்சியின் பக்கம் சாயும் என்பதனை சுப்ரா நினைவில் கொள்ளவேண்டும். அடிப்படை உரிமையான தாய்மொழிக் கல்வியை பயில தடையாய் இருப்பவர்களை தட்டிக் கேட்க  திராணியும் தைரியமும் இல்லாத ஒரு ம.இ.கா தலைவரை மக்கள் தூக்கி எறியத் தயங்கமாட்டார்கள்  என்பதனை சுப்ரா நினைவில் வைத்துக்கொள்வது நல்லது என்று குலா எச்சரிக்கை விடுத்தார்.

தங்கள் கட்சி உட்பூசல்களை ஒரு புறம் தள்ளி வைத்துவிட்டு இந்தியர்களின் உணர்சிகளுக்கும் உரிமைகளுக்கும் சவால் விடும் இந்தப் பிரச்சனைக்கு உடனடி தீர்வு  காண வேண்டுமென சுப்ராவை கேட்டுக் கொள்கிறேன் என்று வேண்டுகோள் விடுத்த குலசேகரன், “அப்படி அவர் இப்பிரச்சனைக்கு விடிவு காணவில்லை என்றால் நிச்சயமாக நான் இதனை அடுத்த நாடாளுன்ற கூட்டத்தில் எழுப்புவேன்”, என்று அவர் தமது நிலைப்பாட்டை வெளியிட்டார்.