அரசாங்கம் “உண்மையை மறைக்கவே” த மலேசியன் இன்சைடர் இணையத்தளத்தை முடக்கிப் போட்டிருக்கிறது என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார்.
“மக்களுக்கு உண்மை தெரிய வந்திடும் என்ற பயம் அரசாங்கத்துக்கு. அதனால்தான் முடக்கி வைத்தார்கள். தாங்கள் செய்வதை மூடி மறைக்கவே அப்படிச் செய்தார்கள்.
“நாட்டில் நடப்பதை மக்களுக்குத் தெரிவிக்க அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்”, என கேஎல்சிசி-இல் ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட மகாதிர் செய்தியாளர்களிடம் கூறினார்.
மலேசியா, வட கொரியா போன்று ஒரு சர்வாதிகார நாடாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அந்தத் திசை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது என்றாரவர்.
“நஜிப்புக்கு எதிராக என்ன செய்தாலும் சொன்னாலும் கைது செய்யப்படலாம், தடுத்து வைக்கப்படலாம், நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படலாம் என்று மக்கள் அஞ்சுகிறாரக்ள்”, என மகாதிர் தெரிவித்தார்.
‘த மலேசியன் இன்சைடர்’ செய்தித்தளம் முடக்கி வைக்கப்பட்டிருப்பதை மலேசிய தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) நேற்று உறுதிப்படுத்தியது.