மகாதீர்: அம்னோ தோற்கடிக்கப்பட வேண்டும், ஆனால்….

 

MvoteUMNOoutஅம்னோ தொடர்ந்து பிரதமர் நஜிப்பை ஆதரிக்குமானால், அக்கட்சி அதிகாரத்திலிருந்து அகற்றப்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார்.

அம்னோ அதிகாரத்திலிருந்து அகற்றப்பட வேண்டுமா என்று வினவப்பட்ட போது, “ஆனால், எதிரணியிடம் பெரும்பான்மை இல்லையே”, என்றாரவர்.

நஜிப்புக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் என்பதை நிராகரித்த மகாதீர், அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் நஜிப்புக்கு எதிராக வாக்களிக்கும் துணிவு அற்றவர்கள் என்றார்.

இன்று புத்ரா ஜெயாவில் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய மகாதீர் அம்னோவிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

அதற்கு முன்னதாக, மகாதீர் எதிரணி உறுப்பினர்களைச் சந்தித்தார். அவர்களில் அமனாவின் முஜாகிட் யூசுப் ராவா, ஹாத்தா ரமலி மற்றும் ஹனிபா மைடின் ஆகியோருடன் பிகேஆரின் தியன் சுவாவும் அடங்குவர்.

அவர்கள் நஜிப்பை அகற்றுவது பற்றி விவாதித்ததாகவும் அதன் அடிப்படையில் ஒரு பொதுவான முடிவுக்கு வந்துள்ளதாகவும் மகாதீர் தெரிவித்தார்.

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று கேட்டதற்கு, பிரதமர் நஜிப்பிற்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைப்பதற்கு ஒரு முக்கியமான குழுவை அமைக்க வேண்டும் என்று கூறிய மகாதீர், அக்குழுவுக்கு அவர் தலைமை ஏற்கக்கூடாது என்றார்.

“நான் அவர்களில் ஒருவராக (உறுப்பினராக) இருப்பேன், ஆனால் தலைமை வகிக்க மாட்டேன்”, என்று மகாதீர் கூறினார்.