அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களை ஆங்கிலத்தில் கற்பிக்கும் கொள்கையை மசீச, மஇகா, கெராக்கான் ஆகியவை ஆதரிப்பது மலாய்மொழிக்குக் குழிபறிப்பதாகும் எனக் கல்வி துணை அமைச்சர் முகம்மட் புவாட் ஜர்காஷி சாடியுள்ளார்.
“அவர்களின் நிலைப்பாடு மலாய்மொழியைப் பலவீனப்படுத்தி விடும். எம்பிஎம்எம்பிஐ(மலாய்மொழியின் மேன்மையை நிலைநிறுத்தி ஆங்கிலமொழிப் புலமையை வலுப்படுத்தும் கொள்கை) வழியாக ஆங்கிலமொழியை வலுப்படுத்தும் அமைச்சின் கொள்கைமீது அவர்கள் ஐயம்கொள்ளக்கூடாது”, என்றவர் கூறியதாக பெரித்தா ஹரியான் அறிவித்துள்ளது.
தாய்மொழிப் பள்ளிகளில் தாய்மொழிகளில்தான் ஆங்கிலமும் கணிதமும் கற்பிக்கப்பட வேண்டும் என்று வாதாடும் இக்கட்சிகள், இடைநிலைப்பள்ளிகளில் அப்பாடங்கள் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுவதை ஆதரிப்பது ஏன் என்று புவாட் (வலம்) வினவியதாகவும் அவ்வறிக்கை கூறியது.
அவற்றின் நிலைப்பாட்டிலிருந்து மலாய்மொழி கல்வியறிவையும் ஒற்றுமையையும் வளர்க்க ஓர் ஊடகமாக செயல்படுவது அக்கட்சிகளுக்குப் பிடிக்கவில்லைபோல் தெரிகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
“பிபிஎஸ்எம்ஐ விவகாரத்தில் எந்தத் தரப்பும் இரட்டைப்போக்கைக் கடைப்பிடிக்கக் கூடாது”, என்றாரவர்.
பிபிஎஸ்எம்ஐ அடுத்த ஆண்டு இறுதியில் முடிவுக்கு வருமென்று தெரிகிறது. ஆனால் அக்கொள்கை தொடரப்பட வேண்டும் எனச் சில தரப்புகள் விரும்புகின்றன. ஆளும் கட்சியில் உள்ள பங்காளிக்கட்சிகள் சிலவும் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
அத்தரப்புகளில் முக்கியமான ஒன்று கல்வி மீதான பெற்றோர் நடவடிக்கைக் குழு (பேஜ்). பிபிஎஸ்எம்ஐ கொள்கையைத் தொடர்ந்து வைத்திருக்கும் விருப்பத்தேர்வு சில நகர்ப்புறப் பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்று அது கேட்டுக்கொண்டிருக்கிறது.
ஆனால், கல்வி அமைச்சர் முகைதின் யாசின், இவ்விவகாரம் குறித்து 2009-லேயே தீர்மானிக்கப்பட்டு விட்டது என்றும் அதுவே முடிந்த முடிவு என்றும் இனி விவாதிக்க இடமில்லை என்றும் நேற்று அறிவித்தார்.