முன்னாள் ஏஜி நஜிப்புக்கு எதிரான சாட்சியங்களை வைத்திருந்தார், முகைதின் மீண்டும் கூறுகிறார்

 

Muhyddinproofagபிரதமர் நஜிப்புக்கு எதிரான சாட்சியங்களை முன்னாள் சட்டத்துறை (ஏஜி) தலைவர் வைத்திருந்தார் என்று அம்னோவின் துணைத் தலைவர் பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ள முகைதின் யாசின் மீண்டும் கூறுகிறார்.

ஏஜி தம்மிடம் காட்டிய சாட்சியம் நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் பணம் போடப்பட்டது பற்றியதாகும் என்றாரவர்.

கனி பட்டேயில் தம்மிடம் இன்னும் அதிகமான சாட்சியங்களை காட்டியதாக கூறிய முகைதின் யாசின், அவற்றை வெளியிட முடியாது ஏனென்றால் வழக்கு இன்னும் நீதிமன்றத்திற்குச் செல்லவில்லை என்றார்.

“நஜிப் இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளார் என்பதற்கான தெளிவான சாட்சியங்கள் இருக்கின்றன என்பது எனக்குத் தெரியும்”, என்று கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற ஒரு செயதியாளர் கூட்டத்தின் முகைதின் கூறினார்.

நஜிப்புக்கு எதிரான குற்றச்சாட்டை முன்னாள் ஏஜீ கனி பட்டேயில் தயாரித்திருந்தார என்ற கேள்விக்கு, “எனக்குத் தெரியாது” என்று அவர் பதில் அளித்தார்.

நஜிப்பை கவிழ்ப்பதற்கான சதித் திட்டத்தில் தமக்கு பங்கிருப்பதாகக் கூறப்படுவதை அவர் மறுத்தார்.

“சதித்திட்டம் ஏதும் இல்லை”, என்று அவர் மேலும் கூறினார்.

தாம் துணைப் பிரதமராக இருந்த போது சட்டத்துறை தலைவர் கனி பட்டேயிலை சந்திப்பது வழக்கமான ஒன்றே என்று அவர் மேலும் கூறினார்.