நஜிப் பதவி விலக, மக்கள் பிரகடனத்தை மகாதீர் முன்வைத்தார்!

m1மலேசியாவை காப்பாற்ற வேண்டுமானால் முதலில் நஜிப் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய 37 பத்திகளைக் கொண்ட ஒரு பிரகடனம் முக்கிய அரசியல் தலைவர்கள் வழி வெளியிடப்பட்டது. இதற்கு மூலகாரணமாக இருந்தவர் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் ஆவார்.

இன்று பிற்பகல் நான்கு மணியளவில் மலாயா பல்கலைகழக முன்னாள் மாணவர் சங்க கிளப் ஹவுஸ் வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இந்தப் பிரகடனம் வெளியிடப்பட்டது. இதில் முன்னாள் துணைப் பிரதமரும் அம்னோவின் முன்னாள் துணைத் தலைவருமான முகிடின் யாசின், மூத்த மசீச முன்னாள் தலைவர் லீ லியோங் சிக், முன்னாள் கெடா மந்திரி புசார் முக்ரிஸ், சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி உட்பட சுமார் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டனர்.

இந்தப் பிரகடனத்தின் முக்கிய சாரம் இரண்டாகும்:

முதலாவதாக, 1எம்டிபியின் ஊழல். இது எவ்வாறு உருவானது; அதில் எவ்வளவு பணத்தை முதலீடு செய்தார்கள்; அவை என்ன ஆனது என்பவை விவரிக்கப்பட்டன. இது முழுமையாக நஜிப் தனது பண அரசியலை நடத்தப் பயன் படுத்தப்பட்டது என்றும், அதன் பயனாக ரிம42 பில்லியனை கடனாகப் பெற்று பல திட்டங்களின் வழி பட்டுவாடா செய்த நஜிப் தனது வங்கிக் கணக்கிலும் பணத்தை கையாண்டார் என்பதாகும்.

m4இரண்டாவது, இந்த ஊழல் சார்பாக  கேள்விகள் கேட்கும் எவரையும் அடக்கவும் ஒடுக்கவும் அரசாங்க அமைப்பு முறைகள் பயன்படுத்தப்பட்டதாகும். புலனாய்வுத்துறை, அட்டார்னி ஜெனரல் அலுவலகம், காவல்துறை, இலஞ்ச ஒழிப்பு இலாக்கா, மத்திய வங்கி போன்றவை பிரதமரின் கட்டுப்பாட்டுக்குள் இயங்குவதால், இவற்றை நஜிப் பயன்படுத்திக்கொண்டு நாட்டின் நிலைத்தன்மையை புரையோடச் செய்துள்ளார் என்பதாகும்.

இதற்கு தீர்வாக இரண்டு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன:

முதலாவது, நஜிப் பதவி விலக வேண்டும். இதை அரசமைப்புக்கும், நாட்டின் சட்ட திட்டங்களுக்கும் உட்பட்ட வகையில் நிறைவேற்ற வேண்டுவதாகும்.

இரண்டாவதாக, புரையோடிப்போயிருக்கும் அரசாங்க அமைப்பு முறைகளை மீட்டெடுப்பதாகும். அதோடு அதில் தொடர்ந்து குற்றம் செய்பவர்களைத் தண்டிப்பதாகும்.

அரங்கம் நிறைய செய்தியாளர்கள் இருந்தனர். அவர்களுக்கு பதில் அளித்த பல அரசியல் தலைவர்கள்,  இந்தப் பிரகடனத்தின் வழி மக்கள்தான் மாற்றத்தை கொண்டு வர இயலும் என்றனர். அதனால்தான் இதை மக்கள் பிரகடனம் என்றழைக்கிறோம் என்றனர்.

m3இதில் கலந்து கொண்டவர்களில் அம்பிகா சீனிவாசன், பெர்சே அமைப்பின் தலைவர்  மரியா சின் அப்துல்லா, பாஸ் கட்சியின் மாபுஸ் ஒமார்,அமனாவின் மாட் சாபு, முஸ்தபா முகமாட், முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராகிம், பிகேஆர் கட்சியின் ரபிசி ரம்லி, முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் முகமட் தாயிப் ஆகியோரும் இருந்தனர்.

முன்னாள் நிதியமைச்சர்  டைம் சைுனுடின், முன்னாள் அமைச்சர் ஸாபி அப்டால், முன்னாள் போலீஸ் படைத் தலைவர் ஜமான் கான் ஆகியோரும் ஆதரவு கொடுத்துள்ளதாக நிகழ்ச்சி வழிநடத்துனர் சைட் சாடிக் தெரிவித்தார்.

‘இந்த மாறுபட்ட  ஒன்றுகூடல் மலேசியாவின் எதிர்காலத்தை காப்பற்ற வழி வகுக்கும் என்ற நம்பிக்கையை தாம் கொண்டுள்ளதாக’ அன்வார் இப்ராகிம் வெளியிட்டதாக ஓர்  அறிக்கை கூறுகிறது.

இதில் பார்வையாளராகக் கலந்து கொண்ட சுவராம் மனித உரிமைக் கழகத்தின் தலைவர் கா. ஆறுமுகம், இது ஒரு வரலாற்று திருப்புமுணை என்றார். அரசாங்க அமைப்பு முறைகளைக் கெடுத்தவரே மாகாதீர்தான். இன்று அவரே மாற்றம் வேண்டும் என்கிறார். அவருக்கு, நஜிப் பதவி விலக வேண்டும், ஆனால், மக்கள் மேம்பாடடைய கண்டிப்பாக அரசியல் மாற்றம் தேவை. அரசியல் இயந்திரங்களும் அமைப்பு முறைகளும் அரசமைப்பு சட்டத்திற்கு  உட்பட வேண்டும். அவை பிரமரின் கீழ் இயங்கக்கூடாது. ஒரு முழுமையான தீர்வுக்கு முதல் கட்டம் நஜிப்பின் பதவி விலகல்தான். நஜிப் இருக்கும் வரை பிற மாற்றங்கள் வராது என்கிறார்.