‘முகைதின் திருந்த வேண்டும்; அம்னோவுக்குத் திரும்ப வேண்டும்’

susஅம்னோ  துணைப்  பதவியிலிருந்து  நீக்கப்பட்ட  முகைதின்  யாசின்,  மீண்டும்  அம்னோவுக்குத்   திரும்பி வந்து  அம்னோமீது  மக்களுக்குள்ள  நம்பிக்கையை  நிலைநிறுத்த  உதவ  வேண்டும்.  கூட்டரசுப்   பிரதேச  அம்னோ  இளைஞர்  பிரிவுத்  தலைவர்  முகம்மட்  ர்ஸ்லான்  முகம்மட்  ரபி  ஓர்  அறிக்கையில்  இவ்வாறு  கேட்டுக்கொண்டார்.

“உங்கள்  இறுமாப்பை  ஒதுக்கிவைத்து  திரும்பி  வாருங்கள். வந்து அம்னோமீது  மக்களுக்குள்ள  நம்பிக்கையை  நிலைநிறுத்த  உதவுங்கள். பிஎன்  அரசாங்கத்தைக்  கவிழ்க்க  எதிரணியினருடன்  சேர்ந்து   சதி  செய்யாதீர்கள்.

“அம்னோவில்  பல்வேறு  தரப்புகளின்  அழுத்தங்களையும்  கண்டனங்களையும் தாங்கிக்கொள்ள  முடியவில்லை  என்றால்   நீங்கள்  அம்னோவைவிட்டு  விலகிச்  செல்வதே  நல்லது”, என்றாரவர்.

முகைதின்  நேற்று  முன்னாள் பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டும்   அவரின்  கூட்டாளிகளும்  எதிரணித்  தலைவர்களுடன்  இணைந்து  நடத்திய  செய்தியாளர்  கூட்டத்தில்  கலந்துகொண்டதை  அடுத்து   அம்னோ  கூட்டரசுப்  பிரதேச  இளைஞர்  பிரிவு  இந்த  அறிக்கையை  விடுத்தது.

தங்கள்  ஆசையை  நிறைவேற்றிக்கொள்ள  எதிரணியினருடன்  கைகோக்கும்   முகைதினையும்  மகாதிரையும்  அது  கண்டித்தது.

“மலாய்க்காரர்களுக்காகவும்  அம்னோவுக்காகவும்  பாடுபடுவதாகக்   கூறிவந்த  தலைவர்கள்  இப்போது  நஜிப்பைக்  கவிழ்க்க  சதிசெய்வதைக்  காண  அதிர்ச்சியாக  இருக்கிறது”, என்று  ரஸ்லான்  கூறினார்.